12/28/2022

ஒரு மீன்

விழித்திருக்கும்
இந்த கடலை
அதிகபட்சமாக
என்ன செய்துவிடலாம்?
அலைக்கு திகட்டும் வரைக்கும்
உப்பூறச்செய்யலாம் கடலை.
வலைகள் சலிக்கும் போது
படகேறச் சொல்லலாம் கடலை.
நதி கலந்தாலும்
கன்னி கழியாத கடலாக்கலாம் மேலும்.
இத்தனை நிகழ்ந்த பின்பாகவும்
மீன் விழித்திருக்கிறதென அறிக.
மிக இலகுவாகவே
எனது கடலை தாண்டி விடுகிறாள்
மற்றோர் மச்சமாக.
-லலித்தா-

12/26/2022

தனிமையின் தாலாட்டு. கவிதை - சுருதி ரகுபதி

விடியும் காலையிலும்  

விழிநீர் முந்தியடிக்கும்.

நாளெல்லாம் காலடியில்
நரகமாய் நழுவவே!
கடந்த காலங்களை
கைவிரல் கடத்திச்செல்லும்.

தலையணைக் கூட,
தாய்மடியாக!
தவறுகளெல்லாம்
சரியெனப்போகும்.

பிணவறைத்தேடி
முன்னங்கால்ச்செல்ல
பிழையெனத்தள்ளி
பின்னங்கால் இழுக்கும்.

பித்தனைப்போல 
குமுறும் வார்த்தையும்
புத்தனைப்போல
அடங்கி நிற்கும். 

மெய்யாகி வரும் 
உறவைக்கூட 
பொய்யோ! என
புறம் தள்ளி வைக்கும்.

12/25/2022

கொட்டியாரப்பற்று வன்னிபங்கள் - நூல் நோக்கு- றொசில்டா அண்டோ

 " கொட்டியாரப்பற்று வன்னிபங்கள்"

          {கட்டுரை தொகுப்பு}

               




நூலாசிரியர்

வைத்திய கலாநிதி திரு த.ஜீவராஜ்

                           அவர்கள்


     தந்தை, மகன் ,பேரன் என்று தொடரும் தலைமுறைகளின் தேடலே

     "கொட்டியாரப்பற்று வன்னிபங்கள்" 


எழுத்தாளனின் கனவு ,கற்றல், எண்ணப்பாடு , அனுபவம் , ஆளுமை

அனைத்தும் சேர்ந்தே தனது ஆக்கத்தை வெளியிடுகிறான் .

அடுத்த தலைமுறைக்கு கொண்டுச் செல்லும் இந்த வரலாற்று ஆவணங்களை தேடி பெறுவதில் உள்ள சிரமம் அளப்பெரியது. 


        174 பக்கங்களைக் கொண்ட இப்பொத்தகம் பெரும் படைப்புக்களில் ஒன்றே......


      இவ் நூலில் 22 கல்வெட்டும் அதில் காணப்பட்ட வாசகங்களுமே இந்நூல் உள்ளடக்கியுள்ளது.

              திருக்கோணமலையினை ஆட்சி செய்த வன்னிபங்கள் ,தேவரடியார்கள், அண்ணாவிமார்கள்,

திருக்கோணேஸ்வரம் போன்ற வரலாற்று அம்சங்கள் இந்நூலில்  பதிவுச் செய்யப்பட்டுள்ளது. 


                 திருக்கோணமலைப்பற்று வன்னிமைகள் பற்றியும்,

             அங்கிருந்த தேசவழமை பற்றியும் அறிய உதவும் வரலாற்றாதாரங்கள் , குறிப்புகள்,

உயில்கள் என்பன இந்நூலில் அறியக்கூடியதாக உள்ளது. 


       சொத்துரிமை தொடர்பாகவும், திருமணம் தொடர்பாகவும், சமயமுறைகள் பற்றியும் விபரிக்கப்பட்டுள்ளதே சிறப்பம்சம். 


     ஆலய திருப்பணிகள் பற்றிய விபரங்கள் கோணேசர் கல்வெட்டுக்களின் ஆதாரங்களாக குறிப்பிட்டுள்ளார்.

             வேள்விகள், நித்திய பூசை, அபிஷேகம், திருவிழா 

உருவவழிப்பாடாகவும்

         பத்தினித்தேவி திருவிழா,மூர்க்கமாதா வேள்வி, கந்தளாய் குளத்து மகா வேள்வி, நாயன்மார்திடல் மடை வைபவம் என்பன அருவ வழிப்பாடாகவும் தெளிவாக பதிவிடுகின்றார்.

  


தம்பலகாமத்து அண்ணாவிமார்கள் பற்றிய ஒரு ஞாபகமீட்டல் தனியாக ஒரு பக்கத்தில் இடம் பெறுகின்றது.

      நாட்டுக்கூத்துக்கள் பெரும்பாலானவை இலவசமாக மேடையேற்றப்பட்டதாகவும், ஒத்திகை காணவே பெருந்திரளான ரசிக பெருமக்கள் ஒன்று கூடியதாகவும், மகிழ்வான தருணமாக நினைவுக்கூறுகின்றார். 


       கழனிமலைக் கல்வெட்டுகள்

திருக்கோணேச்சரத்திற்குச் சொந்தமான சில விக்கிரங்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது.

பின்பு முறையாக பிரதிஸ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டதாகவும் இதனாலே இவ்வாலயத்தின் பெயர் ஆதிகோணநாயகர் ஆலயம் என்று அழைக்கப்பட்டதாகவும் ஆசிரியர் தகுந்த ஆதாரங்களை காட்டி ஆவணப்படுத்துகின்றார். 


           கழனி மலைப் பிரதேசத்தை இன்றைய நாட்களில் உல்பத்வெவ என்ற அழைக்கின்றனர்.

அங்கே கல்வெட்டுக்கள் நடுகல், புரதான படிக்கட்டுக்கள்,

கட்டிட அழிப்பாடுகள், 

வற்றாத நீர்ச்சுனை போன்ற தொல்பொருட்கள் இன்றும் காணலாம்...... 


    துளைக்கொண்ட ஆபூர்வ பானை கந்தளாயில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியதாகவும்,

           தூண் சிதைவுகள், ஆவுடையார், கல்வெட்டுக்கள்,சிவன் பார்வதி சிலை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் 

           வரலாற்று ஆதாரங்களும், பண்பாட்டுச் சின்னங்களும் அழிந்து போவதை எவ்வாறு தடுக்கலாம் என்பதையும் விளக்கியுள்ளார்கள். 


       தம்பலகாம பிரதேசங்களில் உள்ள தன்னார்வலர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள்,

ஆலய பரிபாலன சபையினர்,

புலம் பெயர் அமைப்பு என்பன ஒன்றிணைந்து முறையாகப் பாதுகாக்கக் கூடிய விதத்தில் அருங்காட்சியகங்களை அரச அனுமதியோடு உருவாக்க ஆலோசனைகளையும் முன் வைக்கிறார்.

                 வாசிக்கும் போதே பிரமாண்டத்தை உணர செய்கின்றது இந்நூல்......

  

   பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஆதாரங்களை தேடி அலைவதிலும், தகவல்களை சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டு இயங்கி வரும் வைத்திய கலாநிதி திரு. Thangarasa Jeevaraj  அவர்களை வாழ்த்தி தொடர்ந்தும் இது போன்ற வரலாற்று நூல்கள் எமது தலைமுறைகள் அறியவும் , தேடல் தொடரவும் ஆசிக்கின்றோம்.

       இது போன்ற பெறுமதியான பொத்தகங்கள் அடையாளங்களாக வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை. 

       

 திருக்கோணமலை மண்ணின் வரலாற்றை அறிய விரும்பும் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூலாகும்.

உடைத்தெறியப்பட்ட பிரம்புகள் - சிறுகதை (பிரம்மியா சண்முகராஜா)

 காலை பத்திரிகையில் கூட முதல் பக்கத்தில் புகைப்படமாக சிதைந்த உடலுடன் புகையிரத விபத்து.. நேற்று காலையில் கூட ஏதோ அவனை பார்க்கும்போது மனதில் எப்படியும் இவனை நல்வழிப்படுத்த உதவிட சந்தர்ப்பம் கிடைத்துவிட வேண்டும் என கடவுளிடம் வேண்டியிருந்தார் வீரராகவன். பத்திரி கையில் பார்த்து பெருமூச்சு இரைத்தபடி அதன் மிகுதி பக்கங்களை வெறுமனே புரட்டிப் பார்த்துவிட்டு அதில் செய்திகள் எதுவும் பதிப்பிடப்படாதது போல வெறுமை தென்பட பத்திரிகையோடான ஆழமான சிந்தனையை ஒரு வழியாய் விடுவித்து குளித்து வெள்ளை நிற மேலாடை ஒன்றைத் தேடி எடுத்துப் போட்டுக் கொண்டு தனது துவிச் சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு ஆயத்தமானார். தெருவோரம் எங்கும் நீளமாக காத்திருந்து இருபுறத்திலும் அடுக்கி வைக்கப்பட்ட மோட்டார் வாகனங்கள் அதன் ஓரம் வேப்பமரத்து நிழல் ஒன்றின் கீழ் தன் வண்டியை நிறுத்தி பூட்டிக் கொண்டார் வீரராகவன். ஊர் முழுவதும் நிறைந்த காற்றில் வைரமுத்துவின் மரணக் கவிதை ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க! கண்கள் நிறைந்திட வந்தவர் வாழ்க! என வாழ்த்தி இசையாகிக் கொண்டிருந்தது ஏமாற்றங்களுடன் வீரராகவன். எத்தனை முயற்சிகள் எல்லாம் தோற்றபின் இதுதான் இசை. காற்றோடு போவது தான் வாழ்வா? என்று நிசப்தமான இதய உரையாடலுடன் நடந்தார். ஆங்காங்கே கூடி பரந்திருந்தவர்கள் மற்றும் வெற்றிலை தட்டங்கள் இன்னும் அமர அழைத்து அடுக்கி இருக்கும் நாற்காலிகளின் வரவேற்பு அழைக்கா விருந்துகளில் இதுவும் ஒன்று. கண்ணீராக இங்கு சுவைக்கப்பட பார்வைகள் விழிகளில் பரிமாறப்படும் விருந்து. சுடலை ஞானப் போசனை. அதில் கலந்து கொள்ள அண்டை மக்கள் கூட்டம் ஒலிபெருக்கிக்கு சவால் விடுத்த அவள் ஓல நெடில் காதுகளை இரைத்துக் கொண்டது. வீரராகவன் அந்த உயிர் மூச்சை காற்றில் கலந்து கண்ணொளியை சூரியனுக்குத் தாரை வார்த்து பொன்னுடலை மண்ணுக்குத் தர மடல் மூடி உறங்கிக் கொண்டிருக்கும் தன் மாணவன் மாறனின் உடல் சயனத்தின் ஓரமாய் கடந்து வந்தார். தாமரைச்செல்வி அவன் தாய் தலையை உடைத்து தன் மகனுக்கு அபிஷேகிக்கலாம் என்று அடித்து அடித்து முயற்சி செய்து மூச்சடைத்து அலறிக் கொண்டிருந்தாள் அங்கே அஞ்சலிக்காய் வீரராகவன். அவள் தாமரை வீரராகவனின் வருகையில் இன்னும் துயர் தூண்டப்பட்டவளாகி அவன் கால்களைப் பிடித்துக் கொண்டு ஐயோ சாமி நீங்க தல தலயா அடிச்சிங்களே இவன் நல்லா படிக்கணும் என்று நல்லவனா வாழ வேண்டும் என்று எவ்வளவோ சொன்னீங்களே! செல்லமா வளர்த்த பிள்ளை தானே என்று தான் உங்களையும் அவமானப்படுத்தி போட்டேன். ஐயா நீங்க இரண்டு அடி போட விட்டு இருந்தால் இப்போ என்ர மகன் என்ன விட்டு போயிருக்க மாட்டானே ஐயோ படுபாவிகள் இவன கொண்டு போட்டாங்க ஐயா என்ர புள்ள ரெயின்ல விழுந்து சாக இல்லை ஆரோ குடிகாரன் குடுக்காரன் தள்ளி விட்டுட்டான் ஐயா. நீங்க சொல்ல கேட்கலையே என்ர ராசா இப்ப என்ன செய்யப் போறேன் என்ர புள்ள ஒத்த புள்ள எனக்கு கொள்ளி வைக்க யாரு இருக்கா? பார்த்து பார்த்து வளர்த்தேன் ஐயா!! என்ன செய்வன் ஏன் அவனை பார்க்க வந்தீங்க அவன் உங்க பேச்சு கேட்கலையே என்று அலறி அடித்து பேரிச்சலுக்கு குமுறினாள் தாமரை. வீரராகவன் அடக்கி அமர்த்திய கண்ணீர் அவன் ஆண்மை ஆசிரியத்துவம் எல்லாம் கட்டுடைத்து வடிந்தது. தாமரை அவனைவிட இரண்டு வயதில் மூத்தவள் ஆனாலும் அவள் ஓர் பெண்மணி என்பதினாலும் துயரத்தில் இடம் அறியாமல் தன் பெண்மையை மறந்து ஒற்றைப் பிள்ளையை பறிகொடுத்த தாயாய் அவன் கால்களை இறுக்கிப்பிடித்தபடி அவனிடம் மன்னிப்பு கேட்பதாய் மண்டியிட்டு அழுது கொண்டிருப்பதை புரிந்து கொண்ட பின்னும் தொட்டு ஆறுதல் செய்யவில்லை. அது பெண்ணியக் கனப்படுத்தல் பண்பாடு. அப்படியே பக்கத்தில் இருந்த பந்தல் காலை இரண்டு கைகளாலும் இறுக்க பிடித்து மலைத்து போய் இருந்தார் வீரராகவன். மாறனின் தந்தை கனரக வாகன சாரதி இடைவேளையில்லா இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் அவர்   பற்களின் வண்ணத்தையே வெற்றிலை காவி மாற்றியிருந்தது. அதன் இடுக்குகளில் கூட இன்னும் மிகுதித்துகள்கள் செருகியிருந்தது. தாமரையை தட்டி போதும் விடு என வீரராகவரை விடுவித்து கண்களால் வாட்டமுற்று, வெட்கி, பறிபோயிட்டான் ஐயா என்ர புள்ள...... அவள் விட்டதை தொடர நினைத்தும் பேச முடியாதவராய் அருகிருந்த இருக்கையில் அமர்த்தி விட்டு என்ன மன்னிச்சிடுங்க ஐயா என கும்பிட்டு கண்ணீர் சிந்தினான் மணியம். வீரராகவர் பதில் இன்றி அவர் கைகளை இறக்கி விட்டு தோள் தட்டி தேற்றினார். எதை சொல்வது நான் சொல்ல கேட்கவில்லை என்று திமிர் கொள்ள அவருக்கு தெரியாது. அழ வேண்டாம் கவலைப்பட வேண்டாம் என்று சாதாரணமாக தேற்றுவதும் அர்த்தமற்றது. அமைதியைத்தான் பதிலளிக்க முடியும் அத்தோடு தான் எதனையும் மனதில் வைக்கவில்லை அவன் பிரிவு எனக்கும் ஆற்றொண்ணா துயரம் தான் என்று நிறைந்த கண்களின் ஈரத்தினால் பேசி அமர்ந்தார்.


அன்று மாறன் வழக்கம் போல் பாடசாலைக்கு பிந்தியே வந்திருந்தான். ஆனாலும் அவன் கண்களில் ஒருவித தூக்க மயக்கம் கைகளில் இனிப்புகளுடன் அதிபரின் அறையில் தண்டனைக்காக நிறுத்தப்பட்டிருந்தான். அந்த வழியே வந்த வீரராகவன் அவர் பாடசாலை ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர் பார்ப்பதற்கு பெயரைப் போன்று வீரத்தோற்றம் ஒன்றும் அவரிடம் இல்லை மிகவும் மென்மையானவர். மெலிதான உடல்வாகு. உயரம் நடுத்தரமானவர். அவர் நிறத்தில் கொஞ்சம் கருமை அடர்த்தியானவர் என்பதனால் சற்றுமிடுக்காகத் தெரிந்தார். எப்பொழுதும் கைகளில் கிளுவை மரத்தடிகளுடன் தான் அவரை காண முடியும் பாம்புகளை அடிப்பதற்கு இதை பயன்படுத்துவார்களாம் வேலிகளில் அதிகம் இந்த கிளுவைகளை காணலாம். இது பாம்பிற்கு நச்சுத்தன்மையானதாம் தடியோடு திரிவது வழக்கமான வீரராகவன் சித்திரத்தில் சிங்கம் போன்றவர்.  ஒருநாளும் எந்த மாணவனையும் அடித்ததே இல்லை அன்று மாறன் அவர் கொள்கைக்கு சவாலாய் என்ன மாறும் ஏன் வகுப்புக்கு போகலையா ஒரு மாதிரியாய் இருக்கிறாய் என்று அவனை தொட்டுப் பார்த்தார். மாறன் அவர் கையை வேகமாக ஆத்திரத்தோடு தட்டி விட்டான். ஆச்சரியப்பட்ட வீரராகவன் புரிந்து கொண்டார் சரி நீ ஏதோ குழப்பமாக இருக்கிறாய் நான் அதிபரிடம் பேசி உன்னை வகுப்புக்க அனுப்புகிறேன் என அலுவலகத்தில் சென்று அதிபரிடம் அவனை தான் கவனிப்பதாக வாக்குறுதி அளித்தார் அவரோடு பேச அவன் அனுமதிக்கவில்லை கடுகடுத்தான் மறுநாளும் இது போலவே தாமதமாய்... வீரராகவன் அவனை அவதானித்தார். இவனது நண்பர்கள் பற்றி இவனது போக்குகள் வரத்துகள் பற்றி கண்காணித்தார். அவனுக்கு மறைமுகமாக நேரடியாக பல்வேறு புத்திகளையும் சொன்னார். ஒருநாள் அவர் தாமரை செல்வியை அழைத்து மாறனின் போதைப் பழக்கம் போதை வியாபாரிகளுடன் நட்பு எல்லாவற்றைப் பற்றியும் அவளுடன் பேசினார் அவள் அமைதியாய் கேட்டாலும் என்ர புள்ள அப்படி செய்ய மாட்டான் என அசட்டையாய் எடுத்துக் கொண்டாள். இப்படி வீரராகவனின் முயற்சிகள் பல மாறனோடு இருந்தது. ஒரு நாள் மாறன் வீரராகவன் தன்னை பார்க்க வேண்டும் என்றும் இவர் என்னத்தை செய்யப் போகின்றார் என்றும் அவரை அவமதிக்கும் எண்ணத்தில் அவருக்கு முன்பதாகவே போதையை புகையாக முகர்ந்து இழுத்து கையைத் தட்டி விட்டு வகுப்புக்குள் சென்று கொண்டிருந்தான் ராகவன் பிரம்பும் மனமும் பொறுமையை இழந்து மாறனை கண்டபடி பதம் பார்த்து விட்டது. 

அன்று அதிபரும் விடுமுறை. மாறன் அனுமதி இன்றி பாடசாலை நேரத்திலேயே தனது புத்தகப் பைகளை எடுத்துக்கொண்டு ஆத்திரமாக வீட்டுக்கு திரும்பி விட்டான். தரம் பத்தில் கற்பவன் அவன். பாடசாலை விடும் நேரம் ஏதோ அவனை அடித்த சஞ்சலத்திலும் அவன் கோபமாக கடந்து சென்றதை நினைத்தும் மேலும் இந்த நடத்தைகளை எப்படி மாற்றலாம் என்ற சிந்தனையோடும் ஆழ்ந்திருந்த வீரராகவன் தொடர்ந்தும் தனது முயற்சிகளை அவன் நடத்தையை மாற்றி விட வேண்டும் என்ற நோக்கிலே நகரத்தினார்.அப்போது மாறனின் தந்தை மணியத்திடம் பேசலாம் என நினைத்தார் சாரதி மணியம் அவனும் மது விரும்பி அன்று மணியம் முழுபோதையில் இருந்தான். இதை அறியாமல் அவனை பாடசாலைக்கு வருமாறு அழைத்தார் வீரராகவன். மாறனை கையோடு அழைத்து வந்த மணியம் என்ட புள்ளைய கைநீட்டி அடிக்க நீ யாரடா என பாடசாலையில் அனைவரும் பார்க்க ஓங்கி அறைந்தார். வீரராகவன் அவரது அடி வேகத்தில் பக்கத்தில் இருந்த மாதிலில் ஆசிரியர் சாய்ந்து கொண்டார். சக ஆசிரியர்கள் தடுத்து விட்டனர். இப்படி நல்வழிப்படுத்த நினைத்த வீரராகவன் இறுதியில் அவர் மாறனை அடித்த குற்றத்திற்காக தண்டப்பணமும் செலுத்தினார். என்ன நடைமுறை சட்டமோ ஆசிரியத்துவம் மதிப்பற்று நாளைய தலைமுறை என்னாகுமோ என்ற ஏக்கமே வீரராகவனுக்கு. வேறு எந்த அவமானமும் அவர் சிந்தைக்குள் நுழையவில்லை. இப்படி நடந்து இரண்டு தினங்கள்தான் இன்று வீரராகவன் என் அவமானங்கள் பொறுமை கூட வீனாகிவிட்டதே. முயற்சிகள் எதுவும் பயன் தரவில்லையே. என்று கவலையில் பக்கத்துக் கதிரையில் இருந்தவரை நிமிர்ந்து பார்த்தார்.


 ஓம்மைய்யா இவன் கஞ்சா வித்தத பொலீஸ் பார்த்துட்டானாம். இவன் பிடிபட்டால் பெரிய கைகளும் மாட்டி விடும் என்று இவன் கொண்டு போட்டு ரயில எறிந்து விட்டார்களாம் என்றார். அம்மா அப்பாவும் செல்லம். அவன் ஒரு புள்ள என்பதுல அவன் நினைத்ததை செய்ய விட்டுடினம் இப்ப பாருங்க..  உங்களுக்கு நடந்ததும் கேள்விப்பட்டேன். மாதா பிதா செய்தது மக்களுக்கு என்றார் அதே வெற்றிலை வாயுடன் அவர். அவரைத் தட்டி அப்பா உங்கள வரட்டாம் என்றான் யுகன். அவனும் மாறனின் சாயலானவன் வீரராகவன் தொடர்ந்தார் மற்றவர்களுடன். பாவம் இன்னும் பல அடிகள் நிச்சயம் ஆலோசகருக்கு.

தமையனும் அவளும் -சிறுகதை ( டிலுக்சி சந்திரகுமார்)

 

சூரியன் தனது ஆயிரம் கரங்களைச் சுருக்கிக் கொண்டு மலைகளைக் கடந்தும் கடலுக்கடியில் தன்னை மறைத்துக் கொண்ட சாயங்காலப் பொழுது 6.30 மணியிருக்கும் ஜனனியை சைக்கிளின் பின்னால் ஏற்றிக்கொண்டு சுமதி சைக்கிளை மிதித்துச் சென்றாள். ஜனனி பின்னால் இருந்து “கெதியா போவனடி..லேட்டா போனா என்ட அம்மா அடி வெழுத்துப்போடுவா... உன்ட சைக்கிள்ல வாறதுக்கு இறங்கி ஓடிப்போனாலும் வேளைக்கு போய்ச் சோ்ந்துருவன் போல..” என்றவுடனே சுமதி “அப்போ நல்லம் இறங்கி ஓடடி.. எனக்கு இளைச்சு இளைச்சு சைக்கிள் ஓட ஏலாமக் கிடக்குது..” என்றவள் ஓங்கி வேகமாக சைக்கிளை தொடர்ந்து மிதித்தாள்.

சுமதியின் மூச்சிளைக்கும் சத்தம் ஜனனியை கலங்கச் செய்தாலும் தன்னுடைய நிலையை எண்ணியபடியே “கோபிக்காதடி சுமதி.. என்ட அம்மாவப் பற்றி உனக்குத் தெரியாதா என்ன.. இப்பவே 6.30 மணியாச்சு.. இன்னும் சுனங்கிப் போனா என்ன நடக்குமெண்டு உனக்குத் தெரியாதா?”

“அதுக்கு நீ வேளைக்கே வெளிக்கிட்டு இருக்கவேணும்… இப்ப வந்துட்டு என்னய குறை சொல்லிக்கொண்டிருக்கிறாய்..”

“சரியடி கோபிக்காம சைக்கிள கொஞ்சம் வேகமா மிதி.. உனக்கு புண்ணியமா போகும்..”

“சரி விடு.. நான் வேகமா போகப் பாக்கிறன்..” என்று இருவரும் மாறி மாறி கதைத்துக் கொண்டே ஜனனியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். வாசலிலேயே ஜனனியின் அம்மா பிரம்பை பின்னால் மறைத்துக் கொண்டு நின்றவள் ஜனனி வந்தவுடனேயே ஜனனியின் காதைத் திருகிக் கொண்டு அவளை வீதியிலிருந்து இழுத்து வந்து “எங்கயடி போனனி இவ்வளவு நேரமும்… உனக்கு சொன்னனானெல்லோ எங்கயும் போகவேணாமெண்டு.. என்ட சொல்லு கேட்கக் கூடாதென்டே இருக்கியாடி..”என்று கூறிக் கொண்டே காலுக்குக் கீழ் அடி வெழுத்துக் கொண்டிருந்தாள்.  


“அம்மா… சொல்லிட்டுத் தானே வாசுகிட பிறந்தநாளுக்குப் போனனான்… ஏதோ படத்துக்கு போனமாறி போட்டு அடிக்கிறீங்க..”

“உனக்கடி வாய் கூடிப் போச்சு.. வரவர எதித்து கதைக்க தொடங்கிட்டாயென..” எல்லாம் உந்த சுமதியோட சேந்துதான் நீ இப்புடித் திரியிற.. அடியே சுமதி பொறடி உன்ட அம்மாட்ட வாறன்..”

“ஐயோ.. லீலா மாமி நான் உங்கட கதைக்கே வரல்ல.. என்னய ஆள விடுங்கோ..” என்றவள் சிறிதும் தாமதிக்காமல் சைக்கிளை மிதித்தவள் தனது வீட்டிற்கு சென்றுதான் நிறுத்தியிருப்பாள் போலும்.

“பொம்புளபிள்ள என்டா அடக்கவொடக்கமா வீட்டுல இருக்குறதானே.. இப்படி வீடுவழிய திரிஞ்சா உன்ன எவனடி கட்டுவான்..”

“என்ன எவனும் கட்ட தேவயில்ல..”என்றவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.

“உனக்கு வாய் கூடித்தான் போச்சு.. வாங்கின அடி காணாது போல… சத்தம் போடாம போய் முகத்த கழுவி சாமிக்கு விளக்க கொழுத்து.. உள்ள வந்தன் என்டா.. திரும்ப அடி வெழுப்பன்.. பொறன் நாளைக்கு ரிசல்ட் வருகுது என்டவையல்… அதப் பார்த்து போட்டு மிச்சம் இருக்குது..” என்று கூறியபடியே வீட்டிற்குள் நுழைந்து அடுக்களையை நாடினாள்.

இங்கனம் இவ்வாறிருக்க “லீலா.. லீலா..” என்றபடி கால்களில் சுண்ணாம்பு சாந்து காய்ந்தபடியும் கையிலே மூலைமட்டத்துடனும் மேசன் வேலையை முடித்துவிட்டு ஜனனினியின் தகப்பன் சாந்தன் வீட்டினுள் நுழைந்தான்.

ஜனனி உடனே ஓடி வந்து“அப்பா.. அம்மா என்ன அடிச்சுப் போட்டா.. ஏனென்டு கேழுங்கோ அப்பா..” என்று விம்மிய குரலில் கூறிக்கொண்டு சாந்தனின் வலது கையை பிடித்து குழுக்கினாள். 


“பொறு..பொறு.. லீலா ஏனடி பிள்ளைக்கு அடிச்சனி..” என்று அதட்டியவாறு பாவனை செய்ய “பொம்புள பிள்ள என்டா வீடுவழிய திரியிறதா.. வாசுகிட பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு போய்ட்டு லேட்டாதான் வந்தா.. அதுதான் ரெண்டு குடுத்தனான்..” என்றாள்.

“என்ன மட்டும் அடிக்கிறீங்க அண்ணா இன்னும் வீட்ட வரல்ல அவன ஒன்டும் கேக்காதீங்க.. அவனுக்கு மட்டும் எப்பவும் ஸ்பெஷலாதான் கவனிப்பினம்..” என்று உதட்டை சுழித்துக் கொண்டு முகத்தைத் திருப்பினாள்.

“ஜகன் இன்னும் வரல்லயா.. எட்டு மணியாச்சு.. சரி..சரி..லீலா..பிள்ளைல இனி கைவைக்க கூடாது.. அவளே இன்னும் கொஞ்ச காலந்தான் நம்மளோட இருக்கப் போறாள்....” என்று கூறி ஜனனியின் தலையை தடவினார். ஜனனி தலையிலிருந்து கையை தட்டி விட்டு அறைக்குள் சென்று கதவை தடாலென்று சாத்திக்கொண்டாள்.


லீலா “அவளுக்கு கொழுப்பு கூடிப் போச்சு… இன்னொரு வீட்டுக்கு போகப் போறவள் இப்புடியா திமிறா இருக்குறது.. எல்லாம் நீங்க குடுக்குற செல்லம் தான்…” என்று மறுபடியும் சமயலறைக்குள் புகுந்தாள்.

அன்று இரவு உணவை முடித்துவிட்டு அனைவரும் உறங்கச் சென்ற நேரம் கதவை தட்டும் சத்தம் கேட்டது. சாந்தன் கதவை திறந்த போது காதில் தொலைபேசியில் சிரித்து பேசியபடி நின்றவன் சாந்தனைக் கண்டவுடன் தொலைபேசியை துண்டித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் அந்த வாலிபவன்.


“நில்லடா..” என்று சாந்தன் கூற உடனே ஓடி வந்து லீலா “மகன இப்ப ஒன்டும் சொல்லாதிங்க அவன் களச்சு வந்திருப்பான்.. சாப்பிடட்டும்.. பிறகு கதைங்கோவன்..” என்று சாந்தனைப் பேசவிடாமல் தடுத்தாள்.

“ஓமடி.. ஊர் சுத்திட்டு வந்தவன நல்லா உபசரி..” என்று கூறிவிட்டு உறங்கச் சென்றான்.நடந்தவையனைத்தையும் கதவில் சாய்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த ஜனனி “வந்துட்டான் தடியன்.. அவன் பன்னெண்டு மணிக்கு வந்தாலும் இவயல் ஒன்டும் சொல்ல மாட்டினம்..” என்று முனுமுனுத்தவளது சத்தம் லீலாவின் காதுகளில் எட்டியதோ என்னமோ அவள் மறுமொழியாக “அவன் ஆம்புள புள்ளடி அவன் எத்தனைக்கு வந்தாலும் ஊர் ஒன்டும் சொல்லாது.. நீ வாய மூடிட்டு போய் தூங்கிறியா இல்ல முதுகுல ரெண்டு போடவா..” என்று கேட்டதுதான் தாமதம் ஜகன் கேலிசெய்து ஜனனியைப் பார்த்து சிரித்தான். “போ...டா…தடியா…”என்று கூறியவாறு அறைக்குள் ஓடி தாளிட்டுக் கொண்டாள்.


மறுநாள் பொழுது விடிவதற்கு முன்னமே சாந்தனின் தொலைபேசி மணி ஒலித்தது.. லீலா கண்களைக் கசக்கிக் கொண்டு தொலைபேசியை எடுத்து “ஹலோ..” என்றவுடன் மறுபக்கமிருந்து “ஹலோ.. மாமி நான் வாசுகி கதைக்குறன்.. ஜனனி எங்கமாமி..”“என்னடி இந்த நேரத்துல எடுத்திருக்காய்.. எதுவும் பிரச்சனையா..”“இல்ல மாமி ரிசல்ட் வந்துட்டுது..”“என்னடி சொல்லுற.. இந்த நேரத்துலயா.. யாரு சொன்னது..”“டீச்சர் எடுத்து சொன்னவ மாமி.. ஜனனிட நம்பர் கேட்டவ நான் குடுத்தனான்”“ஆ.. அப்புடியா..உனக்கென்ன ரிசல்டாம்.. சொன்னவையோடி”“ஓம்.. மாமி எனக்கு டூபிசீ(2BC)”“ஆ.. கெட்டிக்காரியடி.. ஜனனிக்கு என்னென்டு சொன்னவையோ..”“ஓம் மாமி..அவளுக்கு திரி ஏயாம்(3A) மாமி.. அவளுக்குத்தான் ஸ்கூல்ல பெஸ்ட் ரேன்காம்..”“ஆ..அப்புடியா.. சரி நீ வை.. நான் அவள எழுப்புறன்..” என்று தொலைபேசியை துண்டித்தவளது முகத்தில் ஒரே பூரிப்பு, மறுபடியும் தொலைபேசி மணி ஒலிக்க “ஹலோ.. என்று கூற “ஹலோ.. நான் ஜனனிட கிளாஸ் ரீச்சர் கதைக்குறன்..”“ஓம் ரீச்சர் கொஞ்சம் பொறுங்கோ.. நான் ஜனனிட்ட குடுக்கிறன்” என்று கூறியவூடன் ஓடிச்சென்று ஜனனியை உழுப்பியவள்“ஜனனி.. ஜனனி..இந்தா ரீச்சர் கதைக்குறா எழும்படி..” என்று எழுப்பினாள். ரீச்சர் என்றவுடன் ஜனனி படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து கொண்டு தொலைபேசியை வாங்கியவள் கரகரத்த குரலில் “ஹ..லோ.. ரீ..ச்ச..ர்..” என்று கூற “ஜனனி.. உனக்கு திரி ஏ.. டிஸ்ரிக்ல நீ செகன்ட் ரேன்க்” என்று முடிக்க முதலே ஜனனியின் விழிகள் ஆந்தையின் விழிகளை ஒத்து விரிந்தது. அவளது பவள வாயில் பற்கள் நிரம்பியிருந்ததை அவளது சிரிப்பு தெரியப்படுத்தியது. தூங்கி வழிந்திருந்த முகம் தாமரை மலர்ந்ததைப் போன்று  மகிழ்ச்சியில் பூரிப்படைந்தது.“வாழ்த்துக்கள் ஜனனி… எங்கட ஸ்கூலுக்கே பெருமை சேர்த்துட்டாய்..”  

“தைங்கியூ ரீச்சர்.. விடிஞ்சோன்ன ஸ்கூலுக்கு வாறன் ரீச்சர்..”“கட்டாயம் வாங்கோ எல்லாரும்.. பிரின்சிபல் உங்கள சந்திக்க வேணும் என்டவர்..” “சரி ரீச்சர்..” என்று தொலைபேசியை துண்டித்தவள் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்ததுவிட்டு தனது தாயின் கரங்கள் இரண்டையும் பற்றி சுற்றி யே.. யே..யே..என்றுகளியொலி எழுப்பினாள். தனது தகப்பனிடமும் தமையனுடனும் தனது இன்பத்தைப் பகிர்ந்தவள் பாடசாலைக்கு சென்று தனது நண்பர்களிடமும் ஆசிரியர்களிடமும் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டாள்.


யூனிவர்சிட்டி பற்றிய ஆசிரியர்களின் ஆலோசனைகளும் நண்பிகளின் பெருமிதங்களும் அவளை ஆட்கொண்டிருந்தபடியே வீட்டை அடைந்தவளுக்கோ பேரதிர்ச்சியே பரிசாகக் கிடைத்தது. அவளது வீட்டில் அவளது பெறுபேற்றுக்கு கிடைத்த வரவேற்பை விட அவளை பெண் கேட்டு வந்ததை எண்ணியே ஆர்ப்பரித்தனர்.சாந்தன் ஜனனியைக் கண்டவுடன் “வாம்மா.. அதிஷ்டகாரி..நல்ல ரிசல்ஸ் வந்திருக்குது.. நல்ல இடத்தில இருந்தும் வரன் வந்திருக்குது… உன்ன நினச்சு இனி பயப்பட தேவையில்ல..”என்று அவளது தலையை தடவினார். உடனே ஜனனி தலையிலிருந்த அவரது கையை தட்டி விட்டு “அப்பா.. என்ன சொல்லுரீங்கள்.. நான் கெம்பஸூக்கு போக வேணும்.. அப்பா..எனக்கு இப்ப கல்யாணம் எல்லாம் வேணாம்..” என்று அடம்பிடித்தாள்.


லீலாவோ ஜனனியை அதட்டியவள் “கெம்பஸஷுக்கு போறியோ.. ரீச்சர் ஆக்கள் ஆயிரம் சொல்லுவினம் இப்பிடி ஒரு நல்ல பொடியன் கிடைக்க மாட்டான்.. கவர்மன்ட் வேலையாம்.. உன்ர பெரியப்பாட சிநேகிதரிட பொடியனாம்.. சீதனத்துக்கு பெரியப்பா உதவி செய்ரன் என்டிருக்கேர்..கெம்பஸஷுக்;கு போறதுக்கும் இவரிட்ட கேட்டு சீதனத்துக்கென்டும் அவரிட்ட போய் நிக்கேலாது.. பொம்புல பிள்ளைக்கு கல்யாணம் கட்டுறது தான் அழகு..படிப்பெல்லாம் உன்னோட வரப் போறதில்ல..சத்தம் போடாம போய் கல்யாணத்துக்கு ரெடி ஆகுறவழிய பார்..” என்று கூறியபடியே சமையலறையைத் தழுவினாள்.கண்களிரண்டிலும் கண்ணீர் முட்ட தனது அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள் பெண்பேதை.

மறுநாள் பொழுது புலர்ந்து பறவைகள் இரை தேடச் சென்ற வேளை லீலா கதவுகளைத் திறந்து வாசலுக்கு தண்ணீர் தெளித்து முற்றம் கூட்டிக்கொண்டிருந்தாள். வாசலுக்கருகில் ஒரு ஜீப் வேகமாக வந்து நின்றது. ஜீப்பிலிருந்து இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்து ஜகனின் வீடு இதுவா என்று விசாரித்து சாந்தனையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். செய்வதறியாதுபித்துப்பிடித்தவள்; போல் அன்றுமுழுவதும் ஜனனியுடன் காத்திருந்தாள் லீலா.

மாலைப் பொழுதும் மங்கிய வேளை சாந்தனும் ஜகனும் வீட்டை அடைந்தார்கள். வீட்டை அடைந்தவுடனேயே ஜகனை வீட்டினுள்ளே தள்ளி முதுகிலே இரண்டு மூன்று அடிகளை சாந்தன் அடிக்க சாந்தனை தடுத்து நிறுத்திய லீலா “தோளுக்கு மேல வளர்ந்தவன இப்புடி போட்டு அடிக்கிறியள்” என்று கூறியவளைப் பாத்து “எல்லாம் நீ குடுக்கிற செல்லம் தானடி பொலுசு வரைக்கும் கூட்டி போய்ட்டான்..” என்று லீலாவை அதட்டினான்.

“என்ன நடந்தது.. ஏன் இவன புடிச்சினமாம்..”“பொடியளோட சேந்து குடிச்சு போட்டு தியட்டர்ல மல்லுக்கட்டியிருக்கான். தியட்டர் சீட்டெல்லாம் உடஞ்சிட்டுதாமென்டு பொலுசுக்கு சொல்லி பொலுசு புடிச்சிட்டு போய்ட்டுதாம்..நான் கொஞ்ச காசு கட்டி கூட்டி கொண்டு வாறன்… இந்த தறுதலைய பெத்ததுக்கு நாலு கழுதைய வாங்கி போட்டிருந்தாலும் உபயோகமாயிருந்திருக்கும்” என்று தலையிலடித்துக் கொண்டான்.

“ஏனடா உந்த வேலைக்கெல்லாம் போறாய்.. மானமெல்லாம் போகுது.. படிப்பும் ஒழுங்கா வரல்ல என்டு காசு கட்டி படிக்க அனுப்பினா நீ இந்த கழுசடைகளோட சேர்ந்து குடிச்சுக்கொண்டு திரியுற..” என்று புலம்பினாள் லீலா. ஜனனியோ தனது மனதினுள் ஆயிரம் கேள்விகள் தன்னை பற்றியும் தன் தமையனைப் பற்றியும் எழுந்திருப்பினும் அவளது பேச்சு அவ்விடத்தில் எடுபடாதென்பதையும் தாய் தகப்பனின் கோபத் தீயில் விழுவதை விரும்பாதவளுமாய் வாயடைத்தவளாயிருந்தாள்.தனது கல்விக்கு செலவளிக்க மறுக்கும் அதே தனது தந்தையும் தாயும் வராத படிப்பிற்காக தனது தமையனுக்கு செலவளிப்பதை எண்ணி தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

இவ்வாறு சில நாட்கள் கழிந்தது.ஜனனியின் பாடசாலையிலிருந்து பாராட்டுவிழாவிற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜனனி எண்ணிலடங்கா பெருமிதத்துடன் தனது பெற்றௌரையும் அழைத்துக் கொண்டு பாடசாலைக்கு சென்றாள். அங்கு அவளுக்கு கிடைத்த உபசரிப்பையும் பாராட்டுக்களையும் அவளது வாழ்நாளிலும் மறந்திருக்க மாட்டள். ஜனனியின் பாடசாலையோ குறிஞ்சி தோட்டம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள சிறிய பாடசாலையாதலால் அங்கிருந்து உயர்தரப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களும் மிகக் குறைந்தளவிலேயே காணப்பட்டனர். ஜனனியே அத்தனை காலத்திற்கும் பல்கலைகழகத்திற்கு தெரிவான முதல் மாணவி. அதுமட்டுமல்லாமல் மாவட்ட அளவிலும் தமது பாடசாலையை பெருமைப்படுத்திய புகழும் ஜனனியையே சாரும். ஆகையினாலே அவளுக்கான பாராட்டு விழா அனைத்து மாணவர்களினதும் சிறப்பு விருந்தினர்களினதும் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஜனனியின் வகுப்பாசிரியையால் மாலை அணிவிக்கப்பட்டு மேடைக்கு அழைத்து சென்று மேடையிலேயே சிறப்பு விருந்தினருக்கு அருகிலே ஆசனமும் வழங்கப்பட்டது. ஜனனி அத்தனை சான்றோருடன் மேடையில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த தோரணையை ஜனனியின் சக வகுப்பு தோழிகளின் பெற்றோர் மெய்ச்சுதலாக பேச சாந்தனும் லீலாவும் மெய்சிலிர்ப்போடு ஓரமாக நின்று பார்த்தனர். கண்கொட்டாமல் மேடையையே பார்த்துக் கொண்டும் அவளுக்கான புகழாரங்களைக் கேட்டுக்கொண்டுமிருந்தவர்களை ஜனனியின் வகுப்பாசிரியை முதல் வரிசையில் அமர்ந்திருக்கும்படி அவர்களை அழைத்துச் சென்றார். அத்தனைபேருக்கும் மத்தியில் தமக்கு கிடைத்த இராஜ வரவேற்பை எண்ணி இருவரும் தமக்குள்ளேயே தமது மகளை எண்ணித்தான் கர்வம் கொண்டதில் வியப்பொன்றுமில்லை.

அன்றைய நிகழ்வு வெகுவாக நடத்தி செல்லப்பட இறுதி நிகழ்வாக சிறப்பு விருந்தினரால் சிறப்புரை வழங்கப்பட்டது.அந்த ஊரிலேயே மிகப்பெரிய தொழிலதிபர்.. குறிஞ்சி கிராமத்தின் அடையாளமாகவும் திகழ்ந்தவரது உரை நிறைய பேரின் எண்ண அலையை மாற்றுமென யாரும் அச்சமயம் அறிந்திருக்க மாட்டார்கள்.

கனத்த குரலில் “அனைவருக்கும் வணக்கம்” என்று ஆரம்பித்த அவரது பேச்சிற்கு கட்டுப்பட்டாற் போல சகல சலசலப்பும் நின்று அரங்கம் முழுவதும் நிசப்தமாகி அவரது உரையை கேட்பதற்கு காற்றுகூட நின்றுவிட்டதென்றே தோன்றியது.“முதலில் இந்த பாடசாலையில் படித்த மாணவர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.. அப்ப நான் படிச்ச காலத்தில ரீச்சர்(ஸ்)க்கு நான் ஒரு அரிய ஜந்துவாகதான் இருந்தன்…சரியான குழப்படி…என்னுடை வீட்டிலயும் மூன்று பொம்புள பிள்ளைகளுக்கு ஒரு பொடியன் என்டு ஒரே செல்லம்.. படிக்காட்டியும் வீட்டுல ஆம்புள பிள்ளையென்டு ஒன்டும் சொல்லமாட்டினம்…அதனாலயே நான் படிப்பில கவனம் செலுத்தவே இல்ல… ஆனா எனக்கு என்ட மூத்த அக்காவெண்டா சரியான பயம்… அவதான் எனக்கு பாடம் சொல்லிதருவா… எனக்கொண்டும் விளங்காது நான் விளங்கின மாரி பாவனசெய்துகொண்டிருப்பன்.. அவ அதையும்கண்டுபிடிச்சு நல்ல வெழு வெழுப்பா… ஹா…ஹா..” என்றவாறு சிரிக்க அவருடன் சேர்ந்து முழு அரங்கமுமே சிரித்தது.


மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தவர் “என்னுடைய மூத்த அக்கா நல்ல கெட்டிக்காரி… பொம்புள பிள்ள என்டு உயHதரத்தோடயே படிப்ப நிப்பாட்டி போட்டினம்… அந்தகாலத்துல வீட்டிலயே பொம்புள பிள்ளையையும் ஆம்புள பிள்ளையையும் வேற மாறித்தான் நடத்துவினம்… இந்த காலம் மாதிரி இல்ல..”

“சாப்பாட்டுல இருந்து படிப்பில இருந்து பழக்கவழக்கம் வரைக்கும் ஆண்களுக்கு முழு சுதந்திரமும் பெண்களுக்கு முழுக் கட்டுப்பாடுமே இருந்தது…என்ற அவரது பேச்சில் அங்கிருந்த பலரது முகம் வெழுத்ததில் ஆச்சரியமொன்றுமில்லையே.. அதிலும் ஜனனியின் பெற்றோர் ஒன்றும் விதிவிலக்கல்ல.

“ஆம்புள பிள்ளைகள் எத்துன மணிக்கும் சுத்தி போட்டு வீட்ட வரலாம்…என்ன தப்பு செய்தாலும் ஆம்புள பிள்ள என்டு யாரும் கவனிக்கிறதில்ல..நானெல்லாம் நிறைய நாள் வீட்டுக்கே போனதில்ல…என்ன யாருமே கேக்கவும் மாட்டினம்..ஆண்கள் விடுற அத்தனை பிழைகளுக்கும் முக்கிய காரணமே பெற்றோரின் கண்டிப்பின்மைதான்..” என்ற அவரது வார்த்தைகள் ஒவ்வொரு ஆண்குழந்தைகளை ஈன்றவருக்கும் ஒரு சவூக்கடியாகவே இருந்தது.

“என்ன விட என்ட அக்கா அவயல் நல்லா படிப்பினம்… ஆனா அவயல இருபது வயசுலயே கல்யாணம் பண்ணி வச்சிட்டினம்…நிறைய பெற்றோர் பெண்கள்ட கல்விய அநாவசியமாகவே கருதுராங்க.. ஆனா அவங்களுக்கு பெண்கள்ட கல்விதான் நாட்டின் எதிர்காலம் என்பது தெரியிறதில்ல.. என்ட பெரிய அக்கா தன்ட கல்யாணத்துல அழுதது எனக்கு இன்னமும் நினைவிருக்கு… நானும் உன்ன போல ஆம்புள பிள்ளையா பிறந்திருந்தா என்னையும் படிப்பிச்சிருப்பினம், நானும் விரும்பினதயெல்லாம் செய்திருப்பன் என்ற அவளுடைய அந்த வார்த்ததைகள் என்னை அப்பவே அதிகம் பாதித்தது…” என அவரது உரை நிகழ்து கொண்டு போக அரங்கம் அனைத்தும் அவரது பேச்சிலே மூழ்கிப்போனது.

“என்ட அப்பா அம்மா விட்ட பிழைகள போலத்தான் இப்பவும் சில பெற்றோர் விடுகினம்… ஆம்புள பிள்ளைகளுக்கு முழு சுதந்திரமும் பொம்புள பிள்ளைகள ஒடுக்கியும் நடத்துவினம்…இதற்கு முக்கிய காரணம் நிறைய பெற்றோர் ஆம்புள பிள்ளைகள் தான் தங்கள கடசி காலத்துல பாப்பினம் என்டு நினைச்சு கொண்டுதான் அவ்வளவும்…ஆனா பொம்புள பிள்ளைகள் தான் தாய் தகப்பனுக்கு ஒன்டென்டா துடிச்சு போயிருவினம் என்டு அவங்களுக்கு தோணுறதில்ல… பெண்களால் முடியாதது எதுமே இல்லை என்று அறிய மறுக்கின்றனர்… பெண்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துற அதே சமூகம் தான் ஆண்களுக்கு எல்லையற்ற சுதந்திரத்தை கொடுத்து சமூகத்தையே சீரழிக்கிறாங்க… ஆண்கள் என்ன தப்பு செய்தலும் அது மன்னிக்கத்தக்க குற்றமாகவே கருதப்படும்… இப்புடி இருந்தா அவன் கொலையும் செஞ்சுபோட்டு வருவான் தானே…”அவரது வார்த்தைகள் அத்தனையும் கல்வெட்டு போல அனைவரது உள்ளத்திலும் பதிந்தது.

“நான் அதிகமா கதைக்க விரும்பல.. ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும்… பாலின சமத்துவமே ஒரு வீட்டினதும் நாட்டினதும் முன்னேற்றத்துக்கு ஆணிவேராகக் காணப்படும்.. என்னுடைய இந்த பேச்சு பலரது சிந்தனைகளை மாற்றியிருக்கும் எனும் நம்பிக்கையுடன் இந்த பாராட்டு விழா நாயகிக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் அதுமட்டுமல்லாமல் அவரது பெற்றோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு இத்துடன் எனது உரையையும் முடித்துக்கொள்கிறேன்.. நன்றி வணக்கம்..” என்ற அவரது உரையின் நிறைவிலே பலரது உள்ளமும் திறந்திருக்கும் என்பதற்கு எந்த ஐயமுமில்லை.


அந்த சிறப்புரையில் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் சாந்தனதும் லீலாவினதும் மனதில் எதிரொலித்துக்கொண்டேயிருந்தது. இருவரும் தாம் இழைத்த தவறுகளை எண்ணி மனதில் புழுங்கியது அவர்களின் அகம் வழியே தோன்றியது.


சாந்தனுக்கும் லீலாவுக்குமே சவுக்கில் அடித்தாற்போல இருந்த அவரது பேச்சில் தமது பிழையை எண்ணி வருந்தினர். தமது மகனின் ஒழுக்கமற்ற நடத்தைக்கு தமது கண்டிப்புக் குறைவுதான் காரணமென்பதையும் தமது மகளின் கல்வியை இடைநிறுத்த நினைத்ததை எண்ணி நொந்துபோனது அவர்களது முகத்திலே பிரதிபலித்தது.

இத்தனையும் நிறைவடைந்த பின்னர் ஜனனி மகிழ்ச்சியில் திளைத்தாலும் தனது கல்விக்கான தேடல் இத்துடன் நிறைவடைந்ததை எண்ணி மனதால் வேதனைகொண்டள் அந்த சிறுமி. வீட்டிற்கு சென்றவுடனேயே ஜனனியை வாரி அணைத்துக்கொண்ட லீலாவோ “உன்ன நினைச்சு நாங்க எவ்வளவு பெருமைப்படடுறம் என்டு உனக்கு தெரியாது… இனி இப்படியே தொடர்ந்து எங்களுக்கு பெருமைய மட்டும்தான் நீ தேடித் தரவேணும்…” என்று கூறியவளை வியந்தவளைப் பார்த்து “நாளைக்கு உன்ர ரீச்சர் கெம்பஸ் போம் நிரப்ப வர சொன்னவ.. அத போய் பார்த்து செய்..” என்று முடித்தாள்.

அவளது வார்த்தையின் அர்த்தத்தை உணராத ஜனனியோ தனது தந்தையை கேள்வியாகப் பார்க்க சாந்தனோ ஜனனியின் தலையைத் தடவியபடி “மன்னிச்சிரும்மா.. நாங்க செஞ்ச தவற இப்ப உணர்ந்திட்டம்.. உனக்கு என்ன படிக்க வேணுமென்டு தோணுதோ அத படி… அப்பா என்ன பாடுபட்டாவது உன்ன படிப்பிப்பன்… உன்னப்போல நிறைய பிள்ளைகள் இருப்பினம்.. அவங்களுக்கெல்லாம் நீ ஒரு எடுத்துக்காட்டா இருக்கவேணும்…” என்ற அவருடைய வார்த்தைகளில் லயித்தவளோ தனது தந்தையை இறுக்கி அணைத்துக்கொண்டாள். தனக்கான எதிர்காலத்தை தானே வகுக்கப் போவதை எண்ணியவளோ மெய்சிலிர்த்து நின்றாள்.

12/23/2022

ஆனந்த அனுபவம் - சிறுகதை : கேணிப்பித்தன் ச.அருளானந்தம்

 ஆனந்த அனுபவம்

அவர் இருதலைக்கொள்ளி எறும்பாகித் தவித்தார். வாழும்போது மகிழ்ச்சியைத் தவிர வேறெதையும் அவர் காணவில்லை. கணவனினின் குணாம்சங்களைப் புரிந்து அதற்கேற்பத் தன்னைப் பக்குவப்படுத்தி  இருந்தாள் மனைவி அன்புமலர.; அழகும் அன்பும் கொண்ட மாது அவள். அவருக்குக் கிடைத்த பொக்கிஷம். ஆளுக்காள் விட்டுக் கொடுக்காத இனிய தம்பதியினர். அவரின் மகிழ்ச்சியே தனது மகிழ்ச்சியாக ஏற்றுக் கைப்பிடித்தாள். மலரவன் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியர். நடந்தும், சைக்கிளிலும் பாடசாலைக்குச் சென்று வந்து கொண்டிருந்ததை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

குறைந்த சம்பளம். என்றாலும் சமாளிக்கக் கற்றுக் கொண்டார். அந்தக் கிராமத்தில் அவர்களது சிறிய நிலத்தில் பல்பயிர்த்திட்டத்தைச் செயற்படுத்தினார். சொந்தக் கிராமத்தைச் சொர்க்கமாக்கும் திட்டத்தை வீட்டுத்தோட்டச் செய்கைத் திட்டமாக்கி அதனைப் போட்டியாக செயற்படுத்தினார். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இயங்கினார்கள். அன்று  மலரவன் பரபரப்பாக இருந்தார். மேற்கொண்டு படிப்பதா, முடியுமா? சமாளிக்;கலாமா? யோசனையில் ஆழ்ந்திருந்தார். இப்படி என்ன யோசனை அவருக்கு? பக்கத்தில் வந்து விசாரித்தாள்.

“;மேல் வகுப்பு மாணவருக்கு கற்பிக்கும் திறனை வளர்த்தெடுக்கும் முயர்ச்சியில் ஈடுபட யோசிக்கிறேன்” என்றார். 

“அதைப்பற்றித்தான் நானும் யோசித்தேன். உங்கட பேருக்குப்பின்னால் ஒரு பி,ஏ பட்டம் கிடைத்தால் எனக்குப் பெருமைதானே”?

அதனை அவர் எதிர்பார்க்கவே இல்லை. அப்படியே உறைந்து போனார்.

கேட்டதும் அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தார். “மலர்! உனனைப் பற்றியே என் மனதில் கவலை. நான் படிக்க வெளியூர் சென்றால் எப்படிக் குடும்பத்தைச் சமாளிப்பாய்? அதுதான் கவலை.”

“நீங்க ஏன் அதைப்பற்றியெல்லாம்  இப்ப யோசிக்கிறீங்க, முதலில் ஏ. எல் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்துங்க” மலர் தொடக்கி வைத்தாள். 

மலரவன் நெகிழ்ந்து போனார். பாடசாலையில் கற்பிப்;பதும், பகல் உணவின்பின் சற்று ஓய்வும், பின்னர் மேலதிகமாகப்  பிள்ளைகளுக்குப் படிப்பிப்பதும், முடிந்ததும் மண்வெட்டியுடன் தோட்டத்தில் வேலை செய்வதும் எனக் கஸ்டப்பட்டு உழைத்தார். குளித்து அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் மேல்வகுப்பு மாணவர்களுக்குப் பாடங்களை கற்பிக்க ஆயத்தப் படுத்துவதுமாக சுறுசுறுப்பாக இயங்கினார்.

தோட்டத்தில் கச்சான், சோளன், இடையிடையே மரவெள்ளியையும் பயிரிட்டிருந்தார். மழை தூறத்தொடங்கியதும் நிலத்தைக் கீறி முளைகள் வெளிவரத் தொடங்கின. பார்த்துப் பரவசம் அடைந்தார். மேரிமலர் தனது கணவனின் விடாமுயற்சிக்கு உந்து சகதியாளாள். மாணவர்கள் உயர்தரப் பரீட்சை எடுத்தார்கள். மலரவன் அதே பரீட்சையை வேறு ஓரு நிலையத்தில் தனிப்பட்ட பரீட்சார்த்தியாகத் தோற்றினார். அவர் பரீட்சை எழுதியது யாருக்கும். தெரியாது. அவருக்கு மனதில் ஒரு அச்சம் இருந்தது. மாணவர்களும் பரீட்சை எடுக்கிறார்கள். தானும் அதே பரீட்சையை எடுப்பதால் தான் சித்தியடையாதுவிட்டால்…..? பரவாயில்லை. மாணவர்கள் சித்தியடைந்தால் அதுதான் வெற்றி. அந்தச் சந்தோசமே போதும். பரீட்சை முடிந்து வீட்டுக்கு வந்தார். மனைவிக்கு மட்டுந்தான் தெரியும். மேரிமலர் இதைப்பற்றி மூச்சே விடவில்லை.

விடுமுறை முடிந்து பாடசாலைகள் தொடங்கிவி;ட்டன.  பாடசாலைகள் தொடங்கினால் நாடு எங்கிலும் ஒரே கலகலப்புதான். காலையில் வீதிகள் எங்கும் வெள்ளைக் கோலம் போட்டதுபோல் இருக்கும். சூரியக் குஞ்:சுகள் புறப்பட்டது போன்று காட்சியாகியது.  அது மக்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பாடசாலையில் நாட்கள் விரைந்தன. உயர்தரப் பரீட்சை பெறுபேறு வந்துவிட்டது.  அஞ்சல் அலுவலகத்தில் இருந்து பாடசாலைக்குரிய பெறுபேறு வந்துவிட்டது. 

பிரித்துப் பார்த்ததும் துள்ளிப் பாய்ந்தார். தனது மாணவர்கள் திறமையாகச் சித்தியடைந்துள்ளதை எண்ணி மகிழ்ந்தார்.  அதேபோல் அவர் மனதில் அமைதியற்ற நிலை தோன்றி அவரை வாட்டியது. பாடசாலைகளுக்கே முதலில் பெறுபேறு கிடைக்கும். அந்தப் பாடசாலையில் மலரவனே அதிபராகச் செயற்பட்டார். பயிற்றப்பட்ட பின் ஐந்து வருடச் சேவை முடித்தவர்கள் அதிபருக்கான போட்டிப் பரீட்சை எடுக்கலாம். மலரவன் அப்பரீட்சைக்குத் தன்னை ஆயத்தப்படுத்தி சித்தியடைந்தார். இன்று அப்பாடசாலையின் அதிபராகத் திறமையாக நடத்திச் செல்கிறார்.

வழமைபோல் பாடம் நடத்திக் கொண்டிந்தார். தபால்காரர் கடிதங்களைக் கொடுத்துச் சென்றார். கடிதங்களை ஒரு ஆசிரியர் வாங்கி அதிபரின் மேசைமேல் வைத்து விட்டார். அது இடைவேளைக்கான நேரம். அதிபர் அலுவலக்கத்தினுள் வந்தார். கடிதங்களைத் தரம் பிரித்து அலுவலகக் கடிதங்களை வேறுபடுத்தி உரிய கோவைகளில் திணித்தார். தனக்கு வந்த கடிதத்தை தனிமையில் பிரித்தார். அது தான் எடுத்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுதான். அதனை மனைவி மேரிமலரிடம் சொல்வதற்காக எழுந்து சைக்கிளில் விரைந்தார். வீடு அண்மையிலேயே இருந்தது. 

பாடசாலைக்குச் சென்றால் ஏதும் அவசரம் என்றால் மட்டுமே வீடு வருவார். வீட்டில் மேரிமலர் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார். எங்கிருந்து வந்தது அவருக்கு அந்தத் தைரியம். அப்படியே மனைவியை அலக்காகத் தூக்கிக் கொண்டாடினார். “மலர் உனது ஊக்கத்தால் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தேன்.  பல்கலைக்கழகம் கிடைக்கும். நான் படிக்கச் சென்றால் எப்படிக் குடும்பததைக் காப்பாற்றுவாய்”? அவர் கண்கள் குளமாயின.

மேரிமலர் தைரியமானவர் என்பதை மலரவன் உணர்ந்திருந்தார். “என்னங்க நீங்க. இதற்காகத்தானே இவ்வளவு காலமும் காத்திருந்தேன். உங்கட பேருக்குப் பின்னால் பி.ஏ. பட்டம் அடையாளமாக பிரகாசிக்க வேண்டும். அதற்காக நான் எதையும் எதிர்கொள்ளத் தயாராகிவிட்டேன். எப்ப பல்கலைக்கழகத்தில் இருந்து கடிதம் வரும்.”? 

மனைவியின் பதில் மலரவனைத் திருப்திப் படுத்தினாலும் அவர் உள்ளத்தில் கவலையை ஊன்றிவிட்டது. யாவுமாகி விஸ்வரூபமாய் நிறைந்திருந்தாள். மனைவி வெறும் போகப்பொருள் என்ற கருத்து எங்கோ மறைந்து விட்டது. சைவசித்தாந்தம் இறைவனை அர்த்தநாரீஸ்வரன் என்று கூறும். ஆண் பாதி, பெண்பாதியாக விளங்குவதாக ஐதீகம். அதனை சிவனும், சக்தியும் என அழைப்பார்கள். நமது உடலின் அமைப்பும் அவ்வாறே உள்ளது. வலப்பும் தூய்மையான செவ்விரத்தம் ஓடுகிறது. .இடப்பக்கமாக நீலநிறமாக ஓடுகிறது.  இதயம் சுத்திகரிக்கும் இயந்திரமாக இயங்குகிறது. இந்த இதயம் இயங்கும்வரைதானே எல்லா ஆட்டமும். 

மலரவன் மனதில் தத்துவம் உருண்டோடியது. மனைவி கொடுத்த தேநீரைக் குடித்தார். அப்படியே பாடசாலைக்குச் சென்றார். தான் பல்கலைக் கழகம் சென்றால் பாடசாலையை நடத்த அதிபர் வேண்டும். அதற்குரிய ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார். பாடசாலையில் இருந்து பரீட்சை எடுத்தலர்களில் பதினைந்துபேர்களில் பதின்மூன்று பேருக்கு யாழ்ப்பாணப் பலகலைக்கழகம் கிடைத்துவிட்டது. மற்ற இருவருக்கும் கல்வியியல் கல்லுர்ரியில் இடம் கிடைத்து விட்டது. மலரவன் மகிழ்ச்சியில் ஆழ்ந்துவிட்டார. அவருக்குப் பேராதனை பல்கலைக்கழகம் கிடைத்திருந்தது. 

“நீ என்னவாக ஆகவேண்டும் என்று எண்ணிச் செயல்படுகிறாயோ அப்படியே ஆகுவாய்”. என்று விவேகானந்தர் கூறினார். கொழும்பு கல்வி அமைச்சின் அலுவலர்களின் ஆலோசனையின் பேரில் கண்டிக்கு இடமாற்றம் பெற்று பாடசாலை ஒன்றில் கடமையேற்றார். அவர் இடமாற்றத்தில் சென்றுவிட்டார் என்றே ஊரார். உரிய விண்ணப்படிவத்தை நிரப்பி இரண்டு வருடக்கடமை லீவுக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைத்தார். கற்பித்தலை நன்றாகவே செய்தார். நல்ல நண்பர்களையும் பேராசியரியர்களின் அன்பையும் தேடிக்கொண்டார். சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் பல்களைக்கழகப் பேராசிரியர்களையும், கல்வியையும் தொடர்ந்தார்.  அவர்களையும் தனது பாடசாலைக்கு அழைத்து அவர்களைக் கௌரவித்தார். பேராசிரியர்களும், பல்கலைக்கழக மாணவ நண்பர்களையும்  பாடசாலைக்கு வந்து கற்பித்தலில் உதவினார்கள். இது ஓருபுதிய அணுகு முறையாகும்.

மலரவன் கற்பித்த பாடசாலை மிகப்பின்தங்கிய பெருந்தோட்டப் பிள்ளைகள் படிக்கும் பாடசாலை. ஒரு வசதியும் இல்லாத பாடசாலை. ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறை நிலவியது. இந்த நெருக்கடியான நிலையில் மலரவன் துவண்டு போனார். உயர்கல்வியைத் தொடரும், அதேவேளை பாடசாலைப் பிள்ளைகளின் கல்வியிலும் கவனம் செலுத்தினார். க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் பத்துப் பிள்ளைகள் திறமையாகச் சித்தியடைந்தனர். பெற்றோரும், ஊர்சனங்களும் பாடசாலையில் கூடி அதிபரையும், ஆசிரியர்களையும் பாராட்டினார்கள். விடுமுறை காலம் வந்தது. மலவரனின் பட்டப் படிப்பும் முடிந்து பெறுபேறும் வந்து விட்டது. தான் பி.ஏ.பரீட்சையில் சித்தியடைந்ததை மனைவிக்கு அறிவித்தார். அது நவீன காலம் இல்லை. கடிதம் மூலம் செய்திகளை அனுப்புவார்கள். ஒரு கிழமையின்பின் மனைவியின் கடிதம் கிடைத்தது. 

திரு.மலரவன், பி.ஏ. அதிபர், என முகவரி எழுதியிருந்தாள். முதன் முதல் எனது மனைவியே எனக்கு பி.ஏ. பட்டத்தை எழுதி அனுபவித்து அனுப்பியுள்ளாளே. அவள் கண்ட கனவை உண்மையாக்கி விட்டேன். அவர் அழுதேவிட்டார். கடிதத்தில் அவளின் ஆதங்கங்களை கொட்டி எழுதியிருந்தாள். 

பெண் ஒரு போகப் பொருளல்ல. சாதனை படைக்க வந்த சக்தி. அவளுடைய பாராட்டுக்கள் மலரவன் உள்ளத்தை நிரப்பியது. ஒரு பெண் நினைத்தால் சாதனை படைப்பாள். இந்த உலகத்தில் புளோறன்ஸ் நைரிங்கேள், ஹெலன் கெல்லர், அன்னை தெரேசா வரிசையில் எனது மலரையும் சேர்க்கலாம். எனது உயர்வுக்காகத் தன்னை உருக்கி தியாக தீபமாக விளங்குகிறளே! அவரது கண்கள் கசிந்தன.

கேணிப்பித்தன்.






புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் இளவரசி - ஊர்துஜா

  ஊர்துஜா   ஒரு புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் இளவரசி , மொராக்கோவை சேர்ந்த முஸ்லிம் பயணி   இபின் பதூதாவின்   பயணக் குறிப்புகளில் (1304 - க...