சூரியன் தனது ஆயிரம் கரங்களைச் சுருக்கிக் கொண்டு மலைகளைக் கடந்தும் கடலுக்கடியில் தன்னை மறைத்துக் கொண்ட சாயங்காலப் பொழுது 6.30 மணியிருக்கும் ஜனனியை சைக்கிளின் பின்னால் ஏற்றிக்கொண்டு சுமதி சைக்கிளை மிதித்துச் சென்றாள். ஜனனி பின்னால் இருந்து “கெதியா போவனடி..லேட்டா போனா என்ட அம்மா அடி வெழுத்துப்போடுவா... உன்ட சைக்கிள்ல வாறதுக்கு இறங்கி ஓடிப்போனாலும் வேளைக்கு போய்ச் சோ்ந்துருவன் போல..” என்றவுடனே சுமதி “அப்போ நல்லம் இறங்கி ஓடடி.. எனக்கு இளைச்சு இளைச்சு சைக்கிள் ஓட ஏலாமக் கிடக்குது..” என்றவள் ஓங்கி வேகமாக சைக்கிளை தொடர்ந்து மிதித்தாள்.
சுமதியின் மூச்சிளைக்கும் சத்தம் ஜனனியை கலங்கச் செய்தாலும் தன்னுடைய நிலையை எண்ணியபடியே “கோபிக்காதடி சுமதி.. என்ட அம்மாவப் பற்றி உனக்குத் தெரியாதா என்ன.. இப்பவே 6.30 மணியாச்சு.. இன்னும் சுனங்கிப் போனா என்ன நடக்குமெண்டு உனக்குத் தெரியாதா?”
“அதுக்கு நீ வேளைக்கே வெளிக்கிட்டு இருக்கவேணும்… இப்ப வந்துட்டு என்னய குறை சொல்லிக்கொண்டிருக்கிறாய்..”
“சரியடி கோபிக்காம சைக்கிள கொஞ்சம் வேகமா மிதி.. உனக்கு புண்ணியமா போகும்..”
“சரி விடு.. நான் வேகமா போகப் பாக்கிறன்..” என்று இருவரும் மாறி மாறி கதைத்துக் கொண்டே ஜனனியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். வாசலிலேயே ஜனனியின் அம்மா பிரம்பை பின்னால் மறைத்துக் கொண்டு நின்றவள் ஜனனி வந்தவுடனேயே ஜனனியின் காதைத் திருகிக் கொண்டு அவளை வீதியிலிருந்து இழுத்து வந்து “எங்கயடி போனனி இவ்வளவு நேரமும்… உனக்கு சொன்னனானெல்லோ எங்கயும் போகவேணாமெண்டு.. என்ட சொல்லு கேட்கக் கூடாதென்டே இருக்கியாடி..”என்று கூறிக் கொண்டே காலுக்குக் கீழ் அடி வெழுத்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா… சொல்லிட்டுத் தானே வாசுகிட பிறந்தநாளுக்குப் போனனான்… ஏதோ படத்துக்கு போனமாறி போட்டு அடிக்கிறீங்க..”
“உனக்கடி வாய் கூடிப் போச்சு.. வரவர எதித்து கதைக்க தொடங்கிட்டாயென..” எல்லாம் உந்த சுமதியோட சேந்துதான் நீ இப்புடித் திரியிற.. அடியே சுமதி பொறடி உன்ட அம்மாட்ட வாறன்..”
“ஐயோ.. லீலா மாமி நான் உங்கட கதைக்கே வரல்ல.. என்னய ஆள விடுங்கோ..” என்றவள் சிறிதும் தாமதிக்காமல் சைக்கிளை மிதித்தவள் தனது வீட்டிற்கு சென்றுதான் நிறுத்தியிருப்பாள் போலும்.
“பொம்புளபிள்ள என்டா அடக்கவொடக்கமா வீட்டுல இருக்குறதானே.. இப்படி வீடுவழிய திரிஞ்சா உன்ன எவனடி கட்டுவான்..”
“என்ன எவனும் கட்ட தேவயில்ல..”என்றவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.
“உனக்கு வாய் கூடித்தான் போச்சு.. வாங்கின அடி காணாது போல… சத்தம் போடாம போய் முகத்த கழுவி சாமிக்கு விளக்க கொழுத்து.. உள்ள வந்தன் என்டா.. திரும்ப அடி வெழுப்பன்.. பொறன் நாளைக்கு ரிசல்ட் வருகுது என்டவையல்… அதப் பார்த்து போட்டு மிச்சம் இருக்குது..” என்று கூறியபடியே வீட்டிற்குள் நுழைந்து அடுக்களையை நாடினாள்.
இங்கனம் இவ்வாறிருக்க “லீலா.. லீலா..” என்றபடி கால்களில் சுண்ணாம்பு சாந்து காய்ந்தபடியும் கையிலே மூலைமட்டத்துடனும் மேசன் வேலையை முடித்துவிட்டு ஜனனினியின் தகப்பன் சாந்தன் வீட்டினுள் நுழைந்தான்.
ஜனனி உடனே ஓடி வந்து“அப்பா.. அம்மா என்ன அடிச்சுப் போட்டா.. ஏனென்டு கேழுங்கோ அப்பா..” என்று விம்மிய குரலில் கூறிக்கொண்டு சாந்தனின் வலது கையை பிடித்து குழுக்கினாள்.
“பொறு..பொறு.. லீலா ஏனடி பிள்ளைக்கு அடிச்சனி..” என்று அதட்டியவாறு பாவனை செய்ய “பொம்புள பிள்ள என்டா வீடுவழிய திரியிறதா.. வாசுகிட பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு போய்ட்டு லேட்டாதான் வந்தா.. அதுதான் ரெண்டு குடுத்தனான்..” என்றாள்.
“என்ன மட்டும் அடிக்கிறீங்க அண்ணா இன்னும் வீட்ட வரல்ல அவன ஒன்டும் கேக்காதீங்க.. அவனுக்கு மட்டும் எப்பவும் ஸ்பெஷலாதான் கவனிப்பினம்..” என்று உதட்டை சுழித்துக் கொண்டு முகத்தைத் திருப்பினாள்.
“ஜகன் இன்னும் வரல்லயா.. எட்டு மணியாச்சு.. சரி..சரி..லீலா..பிள்ளைல இனி கைவைக்க கூடாது.. அவளே இன்னும் கொஞ்ச காலந்தான் நம்மளோட இருக்கப் போறாள்....” என்று கூறி ஜனனியின் தலையை தடவினார். ஜனனி தலையிலிருந்து கையை தட்டி விட்டு அறைக்குள் சென்று கதவை தடாலென்று சாத்திக்கொண்டாள்.
லீலா “அவளுக்கு கொழுப்பு கூடிப் போச்சு… இன்னொரு வீட்டுக்கு போகப் போறவள் இப்புடியா திமிறா இருக்குறது.. எல்லாம் நீங்க குடுக்குற செல்லம் தான்…” என்று மறுபடியும் சமயலறைக்குள் புகுந்தாள்.
அன்று இரவு உணவை முடித்துவிட்டு அனைவரும் உறங்கச் சென்ற நேரம் கதவை தட்டும் சத்தம் கேட்டது. சாந்தன் கதவை திறந்த போது காதில் தொலைபேசியில் சிரித்து பேசியபடி நின்றவன் சாந்தனைக் கண்டவுடன் தொலைபேசியை துண்டித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் அந்த வாலிபவன்.
“நில்லடா..” என்று சாந்தன் கூற உடனே ஓடி வந்து லீலா “மகன இப்ப ஒன்டும் சொல்லாதிங்க அவன் களச்சு வந்திருப்பான்.. சாப்பிடட்டும்.. பிறகு கதைங்கோவன்..” என்று சாந்தனைப் பேசவிடாமல் தடுத்தாள்.
“ஓமடி.. ஊர் சுத்திட்டு வந்தவன நல்லா உபசரி..” என்று கூறிவிட்டு உறங்கச் சென்றான்.நடந்தவையனைத்தையும் கதவில் சாய்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த ஜனனி “வந்துட்டான் தடியன்.. அவன் பன்னெண்டு மணிக்கு வந்தாலும் இவயல் ஒன்டும் சொல்ல மாட்டினம்..” என்று முனுமுனுத்தவளது சத்தம் லீலாவின் காதுகளில் எட்டியதோ என்னமோ அவள் மறுமொழியாக “அவன் ஆம்புள புள்ளடி அவன் எத்தனைக்கு வந்தாலும் ஊர் ஒன்டும் சொல்லாது.. நீ வாய மூடிட்டு போய் தூங்கிறியா இல்ல முதுகுல ரெண்டு போடவா..” என்று கேட்டதுதான் தாமதம் ஜகன் கேலிசெய்து ஜனனியைப் பார்த்து சிரித்தான். “போ...டா…தடியா…”என்று கூறியவாறு அறைக்குள் ஓடி தாளிட்டுக் கொண்டாள்.
மறுநாள் பொழுது விடிவதற்கு முன்னமே சாந்தனின் தொலைபேசி மணி ஒலித்தது.. லீலா கண்களைக் கசக்கிக் கொண்டு தொலைபேசியை எடுத்து “ஹலோ..” என்றவுடன் மறுபக்கமிருந்து “ஹலோ.. மாமி நான் வாசுகி கதைக்குறன்.. ஜனனி எங்கமாமி..”“என்னடி இந்த நேரத்துல எடுத்திருக்காய்.. எதுவும் பிரச்சனையா..”“இல்ல மாமி ரிசல்ட் வந்துட்டுது..”“என்னடி சொல்லுற.. இந்த நேரத்துலயா.. யாரு சொன்னது..”“டீச்சர் எடுத்து சொன்னவ மாமி.. ஜனனிட நம்பர் கேட்டவ நான் குடுத்தனான்”“ஆ.. அப்புடியா..உனக்கென்ன ரிசல்டாம்.. சொன்னவையோடி”“ஓம்.. மாமி எனக்கு டூபிசீ(2BC)”“ஆ.. கெட்டிக்காரியடி.. ஜனனிக்கு என்னென்டு சொன்னவையோ..”“ஓம் மாமி..அவளுக்கு திரி ஏயாம்(3A) மாமி.. அவளுக்குத்தான் ஸ்கூல்ல பெஸ்ட் ரேன்காம்..”“ஆ..அப்புடியா.. சரி நீ வை.. நான் அவள எழுப்புறன்..” என்று தொலைபேசியை துண்டித்தவளது முகத்தில் ஒரே பூரிப்பு, மறுபடியும் தொலைபேசி மணி ஒலிக்க “ஹலோ.. என்று கூற “ஹலோ.. நான் ஜனனிட கிளாஸ் ரீச்சர் கதைக்குறன்..”“ஓம் ரீச்சர் கொஞ்சம் பொறுங்கோ.. நான் ஜனனிட்ட குடுக்கிறன்” என்று கூறியவூடன் ஓடிச்சென்று ஜனனியை உழுப்பியவள்“ஜனனி.. ஜனனி..இந்தா ரீச்சர் கதைக்குறா எழும்படி..” என்று எழுப்பினாள். ரீச்சர் என்றவுடன் ஜனனி படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து கொண்டு தொலைபேசியை வாங்கியவள் கரகரத்த குரலில் “ஹ..லோ.. ரீ..ச்ச..ர்..” என்று கூற “ஜனனி.. உனக்கு திரி ஏ.. டிஸ்ரிக்ல நீ செகன்ட் ரேன்க்” என்று முடிக்க முதலே ஜனனியின் விழிகள் ஆந்தையின் விழிகளை ஒத்து விரிந்தது. அவளது பவள வாயில் பற்கள் நிரம்பியிருந்ததை அவளது சிரிப்பு தெரியப்படுத்தியது. தூங்கி வழிந்திருந்த முகம் தாமரை மலர்ந்ததைப் போன்று மகிழ்ச்சியில் பூரிப்படைந்தது.“வாழ்த்துக்கள் ஜனனி… எங்கட ஸ்கூலுக்கே பெருமை சேர்த்துட்டாய்..”
“தைங்கியூ ரீச்சர்.. விடிஞ்சோன்ன ஸ்கூலுக்கு வாறன் ரீச்சர்..”“கட்டாயம் வாங்கோ எல்லாரும்.. பிரின்சிபல் உங்கள சந்திக்க வேணும் என்டவர்..” “சரி ரீச்சர்..” என்று தொலைபேசியை துண்டித்தவள் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்ததுவிட்டு தனது தாயின் கரங்கள் இரண்டையும் பற்றி சுற்றி யே.. யே..யே..என்றுகளியொலி எழுப்பினாள். தனது தகப்பனிடமும் தமையனுடனும் தனது இன்பத்தைப் பகிர்ந்தவள் பாடசாலைக்கு சென்று தனது நண்பர்களிடமும் ஆசிரியர்களிடமும் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டாள்.
யூனிவர்சிட்டி பற்றிய ஆசிரியர்களின் ஆலோசனைகளும் நண்பிகளின் பெருமிதங்களும் அவளை ஆட்கொண்டிருந்தபடியே வீட்டை அடைந்தவளுக்கோ பேரதிர்ச்சியே பரிசாகக் கிடைத்தது. அவளது வீட்டில் அவளது பெறுபேற்றுக்கு கிடைத்த வரவேற்பை விட அவளை பெண் கேட்டு வந்ததை எண்ணியே ஆர்ப்பரித்தனர்.சாந்தன் ஜனனியைக் கண்டவுடன் “வாம்மா.. அதிஷ்டகாரி..நல்ல ரிசல்ஸ் வந்திருக்குது.. நல்ல இடத்தில இருந்தும் வரன் வந்திருக்குது… உன்ன நினச்சு இனி பயப்பட தேவையில்ல..”என்று அவளது தலையை தடவினார். உடனே ஜனனி தலையிலிருந்த அவரது கையை தட்டி விட்டு “அப்பா.. என்ன சொல்லுரீங்கள்.. நான் கெம்பஸூக்கு போக வேணும்.. அப்பா..எனக்கு இப்ப கல்யாணம் எல்லாம் வேணாம்..” என்று அடம்பிடித்தாள்.
லீலாவோ ஜனனியை அதட்டியவள் “கெம்பஸஷுக்கு போறியோ.. ரீச்சர் ஆக்கள் ஆயிரம் சொல்லுவினம் இப்பிடி ஒரு நல்ல பொடியன் கிடைக்க மாட்டான்.. கவர்மன்ட் வேலையாம்.. உன்ர பெரியப்பாட சிநேகிதரிட பொடியனாம்.. சீதனத்துக்கு பெரியப்பா உதவி செய்ரன் என்டிருக்கேர்..கெம்பஸஷுக்;கு போறதுக்கும் இவரிட்ட கேட்டு சீதனத்துக்கென்டும் அவரிட்ட போய் நிக்கேலாது.. பொம்புல பிள்ளைக்கு கல்யாணம் கட்டுறது தான் அழகு..படிப்பெல்லாம் உன்னோட வரப் போறதில்ல..சத்தம் போடாம போய் கல்யாணத்துக்கு ரெடி ஆகுறவழிய பார்..” என்று கூறியபடியே சமையலறையைத் தழுவினாள்.கண்களிரண்டிலும் கண்ணீர் முட்ட தனது அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள் பெண்பேதை.
மறுநாள் பொழுது புலர்ந்து பறவைகள் இரை தேடச் சென்ற வேளை லீலா கதவுகளைத் திறந்து வாசலுக்கு தண்ணீர் தெளித்து முற்றம் கூட்டிக்கொண்டிருந்தாள். வாசலுக்கருகில் ஒரு ஜீப் வேகமாக வந்து நின்றது. ஜீப்பிலிருந்து இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்து ஜகனின் வீடு இதுவா என்று விசாரித்து சாந்தனையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். செய்வதறியாதுபித்துப்பிடித்தவள்; போல் அன்றுமுழுவதும் ஜனனியுடன் காத்திருந்தாள் லீலா.
மாலைப் பொழுதும் மங்கிய வேளை சாந்தனும் ஜகனும் வீட்டை அடைந்தார்கள். வீட்டை அடைந்தவுடனேயே ஜகனை வீட்டினுள்ளே தள்ளி முதுகிலே இரண்டு மூன்று அடிகளை சாந்தன் அடிக்க சாந்தனை தடுத்து நிறுத்திய லீலா “தோளுக்கு மேல வளர்ந்தவன இப்புடி போட்டு அடிக்கிறியள்” என்று கூறியவளைப் பாத்து “எல்லாம் நீ குடுக்கிற செல்லம் தானடி பொலுசு வரைக்கும் கூட்டி போய்ட்டான்..” என்று லீலாவை அதட்டினான்.
“என்ன நடந்தது.. ஏன் இவன புடிச்சினமாம்..”“பொடியளோட சேந்து குடிச்சு போட்டு தியட்டர்ல மல்லுக்கட்டியிருக்கான். தியட்டர் சீட்டெல்லாம் உடஞ்சிட்டுதாமென்டு பொலுசுக்கு சொல்லி பொலுசு புடிச்சிட்டு போய்ட்டுதாம்..நான் கொஞ்ச காசு கட்டி கூட்டி கொண்டு வாறன்… இந்த தறுதலைய பெத்ததுக்கு நாலு கழுதைய வாங்கி போட்டிருந்தாலும் உபயோகமாயிருந்திருக்கும்” என்று தலையிலடித்துக் கொண்டான்.
“ஏனடா உந்த வேலைக்கெல்லாம் போறாய்.. மானமெல்லாம் போகுது.. படிப்பும் ஒழுங்கா வரல்ல என்டு காசு கட்டி படிக்க அனுப்பினா நீ இந்த கழுசடைகளோட சேர்ந்து குடிச்சுக்கொண்டு திரியுற..” என்று புலம்பினாள் லீலா. ஜனனியோ தனது மனதினுள் ஆயிரம் கேள்விகள் தன்னை பற்றியும் தன் தமையனைப் பற்றியும் எழுந்திருப்பினும் அவளது பேச்சு அவ்விடத்தில் எடுபடாதென்பதையும் தாய் தகப்பனின் கோபத் தீயில் விழுவதை விரும்பாதவளுமாய் வாயடைத்தவளாயிருந்தாள்.தனது கல்விக்கு செலவளிக்க மறுக்கும் அதே தனது தந்தையும் தாயும் வராத படிப்பிற்காக தனது தமையனுக்கு செலவளிப்பதை எண்ணி தன்னைத் தானே நொந்து கொண்டாள்.
இவ்வாறு சில நாட்கள் கழிந்தது.ஜனனியின் பாடசாலையிலிருந்து பாராட்டுவிழாவிற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜனனி எண்ணிலடங்கா பெருமிதத்துடன் தனது பெற்றௌரையும் அழைத்துக் கொண்டு பாடசாலைக்கு சென்றாள். அங்கு அவளுக்கு கிடைத்த உபசரிப்பையும் பாராட்டுக்களையும் அவளது வாழ்நாளிலும் மறந்திருக்க மாட்டள். ஜனனியின் பாடசாலையோ குறிஞ்சி தோட்டம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள சிறிய பாடசாலையாதலால் அங்கிருந்து உயர்தரப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களும் மிகக் குறைந்தளவிலேயே காணப்பட்டனர். ஜனனியே அத்தனை காலத்திற்கும் பல்கலைகழகத்திற்கு தெரிவான முதல் மாணவி. அதுமட்டுமல்லாமல் மாவட்ட அளவிலும் தமது பாடசாலையை பெருமைப்படுத்திய புகழும் ஜனனியையே சாரும். ஆகையினாலே அவளுக்கான பாராட்டு விழா அனைத்து மாணவர்களினதும் சிறப்பு விருந்தினர்களினதும் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஜனனியின் வகுப்பாசிரியையால் மாலை அணிவிக்கப்பட்டு மேடைக்கு அழைத்து சென்று மேடையிலேயே சிறப்பு விருந்தினருக்கு அருகிலே ஆசனமும் வழங்கப்பட்டது. ஜனனி அத்தனை சான்றோருடன் மேடையில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த தோரணையை ஜனனியின் சக வகுப்பு தோழிகளின் பெற்றோர் மெய்ச்சுதலாக பேச சாந்தனும் லீலாவும் மெய்சிலிர்ப்போடு ஓரமாக நின்று பார்த்தனர். கண்கொட்டாமல் மேடையையே பார்த்துக் கொண்டும் அவளுக்கான புகழாரங்களைக் கேட்டுக்கொண்டுமிருந்தவர்களை ஜனனியின் வகுப்பாசிரியை முதல் வரிசையில் அமர்ந்திருக்கும்படி அவர்களை அழைத்துச் சென்றார். அத்தனைபேருக்கும் மத்தியில் தமக்கு கிடைத்த இராஜ வரவேற்பை எண்ணி இருவரும் தமக்குள்ளேயே தமது மகளை எண்ணித்தான் கர்வம் கொண்டதில் வியப்பொன்றுமில்லை.
அன்றைய நிகழ்வு வெகுவாக நடத்தி செல்லப்பட இறுதி நிகழ்வாக சிறப்பு விருந்தினரால் சிறப்புரை வழங்கப்பட்டது.அந்த ஊரிலேயே மிகப்பெரிய தொழிலதிபர்.. குறிஞ்சி கிராமத்தின் அடையாளமாகவும் திகழ்ந்தவரது உரை நிறைய பேரின் எண்ண அலையை மாற்றுமென யாரும் அச்சமயம் அறிந்திருக்க மாட்டார்கள்.
கனத்த குரலில் “அனைவருக்கும் வணக்கம்” என்று ஆரம்பித்த அவரது பேச்சிற்கு கட்டுப்பட்டாற் போல சகல சலசலப்பும் நின்று அரங்கம் முழுவதும் நிசப்தமாகி அவரது உரையை கேட்பதற்கு காற்றுகூட நின்றுவிட்டதென்றே தோன்றியது.“முதலில் இந்த பாடசாலையில் படித்த மாணவர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.. அப்ப நான் படிச்ச காலத்தில ரீச்சர்(ஸ்)க்கு நான் ஒரு அரிய ஜந்துவாகதான் இருந்தன்…சரியான குழப்படி…என்னுடை வீட்டிலயும் மூன்று பொம்புள பிள்ளைகளுக்கு ஒரு பொடியன் என்டு ஒரே செல்லம்.. படிக்காட்டியும் வீட்டுல ஆம்புள பிள்ளையென்டு ஒன்டும் சொல்லமாட்டினம்…அதனாலயே நான் படிப்பில கவனம் செலுத்தவே இல்ல… ஆனா எனக்கு என்ட மூத்த அக்காவெண்டா சரியான பயம்… அவதான் எனக்கு பாடம் சொல்லிதருவா… எனக்கொண்டும் விளங்காது நான் விளங்கின மாரி பாவனசெய்துகொண்டிருப்பன்.. அவ அதையும்கண்டுபிடிச்சு நல்ல வெழு வெழுப்பா… ஹா…ஹா..” என்றவாறு சிரிக்க அவருடன் சேர்ந்து முழு அரங்கமுமே சிரித்தது.
மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தவர் “என்னுடைய மூத்த அக்கா நல்ல கெட்டிக்காரி… பொம்புள பிள்ள என்டு உயHதரத்தோடயே படிப்ப நிப்பாட்டி போட்டினம்… அந்தகாலத்துல வீட்டிலயே பொம்புள பிள்ளையையும் ஆம்புள பிள்ளையையும் வேற மாறித்தான் நடத்துவினம்… இந்த காலம் மாதிரி இல்ல..”
“சாப்பாட்டுல இருந்து படிப்பில இருந்து பழக்கவழக்கம் வரைக்கும் ஆண்களுக்கு முழு சுதந்திரமும் பெண்களுக்கு முழுக் கட்டுப்பாடுமே இருந்தது…என்ற அவரது பேச்சில் அங்கிருந்த பலரது முகம் வெழுத்ததில் ஆச்சரியமொன்றுமில்லையே.. அதிலும் ஜனனியின் பெற்றோர் ஒன்றும் விதிவிலக்கல்ல.
“ஆம்புள பிள்ளைகள் எத்துன மணிக்கும் சுத்தி போட்டு வீட்ட வரலாம்…என்ன தப்பு செய்தாலும் ஆம்புள பிள்ள என்டு யாரும் கவனிக்கிறதில்ல..நானெல்லாம் நிறைய நாள் வீட்டுக்கே போனதில்ல…என்ன யாருமே கேக்கவும் மாட்டினம்..ஆண்கள் விடுற அத்தனை பிழைகளுக்கும் முக்கிய காரணமே பெற்றோரின் கண்டிப்பின்மைதான்..” என்ற அவரது வார்த்தைகள் ஒவ்வொரு ஆண்குழந்தைகளை ஈன்றவருக்கும் ஒரு சவூக்கடியாகவே இருந்தது.
“என்ன விட என்ட அக்கா அவயல் நல்லா படிப்பினம்… ஆனா அவயல இருபது வயசுலயே கல்யாணம் பண்ணி வச்சிட்டினம்…நிறைய பெற்றோர் பெண்கள்ட கல்விய அநாவசியமாகவே கருதுராங்க.. ஆனா அவங்களுக்கு பெண்கள்ட கல்விதான் நாட்டின் எதிர்காலம் என்பது தெரியிறதில்ல.. என்ட பெரிய அக்கா தன்ட கல்யாணத்துல அழுதது எனக்கு இன்னமும் நினைவிருக்கு… நானும் உன்ன போல ஆம்புள பிள்ளையா பிறந்திருந்தா என்னையும் படிப்பிச்சிருப்பினம், நானும் விரும்பினதயெல்லாம் செய்திருப்பன் என்ற அவளுடைய அந்த வார்த்ததைகள் என்னை அப்பவே அதிகம் பாதித்தது…” என அவரது உரை நிகழ்து கொண்டு போக அரங்கம் அனைத்தும் அவரது பேச்சிலே மூழ்கிப்போனது.
“என்ட அப்பா அம்மா விட்ட பிழைகள போலத்தான் இப்பவும் சில பெற்றோர் விடுகினம்… ஆம்புள பிள்ளைகளுக்கு முழு சுதந்திரமும் பொம்புள பிள்ளைகள ஒடுக்கியும் நடத்துவினம்…இதற்கு முக்கிய காரணம் நிறைய பெற்றோர் ஆம்புள பிள்ளைகள் தான் தங்கள கடசி காலத்துல பாப்பினம் என்டு நினைச்சு கொண்டுதான் அவ்வளவும்…ஆனா பொம்புள பிள்ளைகள் தான் தாய் தகப்பனுக்கு ஒன்டென்டா துடிச்சு போயிருவினம் என்டு அவங்களுக்கு தோணுறதில்ல… பெண்களால் முடியாதது எதுமே இல்லை என்று அறிய மறுக்கின்றனர்… பெண்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துற அதே சமூகம் தான் ஆண்களுக்கு எல்லையற்ற சுதந்திரத்தை கொடுத்து சமூகத்தையே சீரழிக்கிறாங்க… ஆண்கள் என்ன தப்பு செய்தலும் அது மன்னிக்கத்தக்க குற்றமாகவே கருதப்படும்… இப்புடி இருந்தா அவன் கொலையும் செஞ்சுபோட்டு வருவான் தானே…”அவரது வார்த்தைகள் அத்தனையும் கல்வெட்டு போல அனைவரது உள்ளத்திலும் பதிந்தது.
“நான் அதிகமா கதைக்க விரும்பல.. ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும்… பாலின சமத்துவமே ஒரு வீட்டினதும் நாட்டினதும் முன்னேற்றத்துக்கு ஆணிவேராகக் காணப்படும்.. என்னுடைய இந்த பேச்சு பலரது சிந்தனைகளை மாற்றியிருக்கும் எனும் நம்பிக்கையுடன் இந்த பாராட்டு விழா நாயகிக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் அதுமட்டுமல்லாமல் அவரது பெற்றோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு இத்துடன் எனது உரையையும் முடித்துக்கொள்கிறேன்.. நன்றி வணக்கம்..” என்ற அவரது உரையின் நிறைவிலே பலரது உள்ளமும் திறந்திருக்கும் என்பதற்கு எந்த ஐயமுமில்லை.
அந்த சிறப்புரையில் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் சாந்தனதும் லீலாவினதும் மனதில் எதிரொலித்துக்கொண்டேயிருந்தது. இருவரும் தாம் இழைத்த தவறுகளை எண்ணி மனதில் புழுங்கியது அவர்களின் அகம் வழியே தோன்றியது.
சாந்தனுக்கும் லீலாவுக்குமே சவுக்கில் அடித்தாற்போல இருந்த அவரது பேச்சில் தமது பிழையை எண்ணி வருந்தினர். தமது மகனின் ஒழுக்கமற்ற நடத்தைக்கு தமது கண்டிப்புக் குறைவுதான் காரணமென்பதையும் தமது மகளின் கல்வியை இடைநிறுத்த நினைத்ததை எண்ணி நொந்துபோனது அவர்களது முகத்திலே பிரதிபலித்தது.
இத்தனையும் நிறைவடைந்த பின்னர் ஜனனி மகிழ்ச்சியில் திளைத்தாலும் தனது கல்விக்கான தேடல் இத்துடன் நிறைவடைந்ததை எண்ணி மனதால் வேதனைகொண்டள் அந்த சிறுமி. வீட்டிற்கு சென்றவுடனேயே ஜனனியை வாரி அணைத்துக்கொண்ட லீலாவோ “உன்ன நினைச்சு நாங்க எவ்வளவு பெருமைப்படடுறம் என்டு உனக்கு தெரியாது… இனி இப்படியே தொடர்ந்து எங்களுக்கு பெருமைய மட்டும்தான் நீ தேடித் தரவேணும்…” என்று கூறியவளை வியந்தவளைப் பார்த்து “நாளைக்கு உன்ர ரீச்சர் கெம்பஸ் போம் நிரப்ப வர சொன்னவ.. அத போய் பார்த்து செய்..” என்று முடித்தாள்.
அவளது வார்த்தையின் அர்த்தத்தை உணராத ஜனனியோ தனது தந்தையை கேள்வியாகப் பார்க்க சாந்தனோ ஜனனியின் தலையைத் தடவியபடி “மன்னிச்சிரும்மா.. நாங்க செஞ்ச தவற இப்ப உணர்ந்திட்டம்.. உனக்கு என்ன படிக்க வேணுமென்டு தோணுதோ அத படி… அப்பா என்ன பாடுபட்டாவது உன்ன படிப்பிப்பன்… உன்னப்போல நிறைய பிள்ளைகள் இருப்பினம்.. அவங்களுக்கெல்லாம் நீ ஒரு எடுத்துக்காட்டா இருக்கவேணும்…” என்ற அவருடைய வார்த்தைகளில் லயித்தவளோ தனது தந்தையை இறுக்கி அணைத்துக்கொண்டாள். தனக்கான எதிர்காலத்தை தானே வகுக்கப் போவதை எண்ணியவளோ மெய்சிலிர்த்து நின்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக