காலை பத்திரிகையில் கூட முதல் பக்கத்தில் புகைப்படமாக சிதைந்த உடலுடன் புகையிரத விபத்து.. நேற்று காலையில் கூட ஏதோ அவனை பார்க்கும்போது மனதில் எப்படியும் இவனை நல்வழிப்படுத்த உதவிட சந்தர்ப்பம் கிடைத்துவிட வேண்டும் என கடவுளிடம் வேண்டியிருந்தார் வீரராகவன். பத்திரி கையில் பார்த்து பெருமூச்சு இரைத்தபடி அதன் மிகுதி பக்கங்களை வெறுமனே புரட்டிப் பார்த்துவிட்டு அதில் செய்திகள் எதுவும் பதிப்பிடப்படாதது போல வெறுமை தென்பட பத்திரிகையோடான ஆழமான சிந்தனையை ஒரு வழியாய் விடுவித்து குளித்து வெள்ளை நிற மேலாடை ஒன்றைத் தேடி எடுத்துப் போட்டுக் கொண்டு தனது துவிச் சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு ஆயத்தமானார். தெருவோரம் எங்கும் நீளமாக காத்திருந்து இருபுறத்திலும் அடுக்கி வைக்கப்பட்ட மோட்டார் வாகனங்கள் அதன் ஓரம் வேப்பமரத்து நிழல் ஒன்றின் கீழ் தன் வண்டியை நிறுத்தி பூட்டிக் கொண்டார் வீரராகவன். ஊர் முழுவதும் நிறைந்த காற்றில் வைரமுத்துவின் மரணக் கவிதை ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க! கண்கள் நிறைந்திட வந்தவர் வாழ்க! என வாழ்த்தி இசையாகிக் கொண்டிருந்தது ஏமாற்றங்களுடன் வீரராகவன். எத்தனை முயற்சிகள் எல்லாம் தோற்றபின் இதுதான் இசை. காற்றோடு போவது தான் வாழ்வா? என்று நிசப்தமான இதய உரையாடலுடன் நடந்தார். ஆங்காங்கே கூடி பரந்திருந்தவர்கள் மற்றும் வெற்றிலை தட்டங்கள் இன்னும் அமர அழைத்து அடுக்கி இருக்கும் நாற்காலிகளின் வரவேற்பு அழைக்கா விருந்துகளில் இதுவும் ஒன்று. கண்ணீராக இங்கு சுவைக்கப்பட பார்வைகள் விழிகளில் பரிமாறப்படும் விருந்து. சுடலை ஞானப் போசனை. அதில் கலந்து கொள்ள அண்டை மக்கள் கூட்டம் ஒலிபெருக்கிக்கு சவால் விடுத்த அவள் ஓல நெடில் காதுகளை இரைத்துக் கொண்டது. வீரராகவன் அந்த உயிர் மூச்சை காற்றில் கலந்து கண்ணொளியை சூரியனுக்குத் தாரை வார்த்து பொன்னுடலை மண்ணுக்குத் தர மடல் மூடி உறங்கிக் கொண்டிருக்கும் தன் மாணவன் மாறனின் உடல் சயனத்தின் ஓரமாய் கடந்து வந்தார். தாமரைச்செல்வி அவன் தாய் தலையை உடைத்து தன் மகனுக்கு அபிஷேகிக்கலாம் என்று அடித்து அடித்து முயற்சி செய்து மூச்சடைத்து அலறிக் கொண்டிருந்தாள் அங்கே அஞ்சலிக்காய் வீரராகவன். அவள் தாமரை வீரராகவனின் வருகையில் இன்னும் துயர் தூண்டப்பட்டவளாகி அவன் கால்களைப் பிடித்துக் கொண்டு ஐயோ சாமி நீங்க தல தலயா அடிச்சிங்களே இவன் நல்லா படிக்கணும் என்று நல்லவனா வாழ வேண்டும் என்று எவ்வளவோ சொன்னீங்களே! செல்லமா வளர்த்த பிள்ளை தானே என்று தான் உங்களையும் அவமானப்படுத்தி போட்டேன். ஐயா நீங்க இரண்டு அடி போட விட்டு இருந்தால் இப்போ என்ர மகன் என்ன விட்டு போயிருக்க மாட்டானே ஐயோ படுபாவிகள் இவன கொண்டு போட்டாங்க ஐயா என்ர புள்ள ரெயின்ல விழுந்து சாக இல்லை ஆரோ குடிகாரன் குடுக்காரன் தள்ளி விட்டுட்டான் ஐயா. நீங்க சொல்ல கேட்கலையே என்ர ராசா இப்ப என்ன செய்யப் போறேன் என்ர புள்ள ஒத்த புள்ள எனக்கு கொள்ளி வைக்க யாரு இருக்கா? பார்த்து பார்த்து வளர்த்தேன் ஐயா!! என்ன செய்வன் ஏன் அவனை பார்க்க வந்தீங்க அவன் உங்க பேச்சு கேட்கலையே என்று அலறி அடித்து பேரிச்சலுக்கு குமுறினாள் தாமரை. வீரராகவன் அடக்கி அமர்த்திய கண்ணீர் அவன் ஆண்மை ஆசிரியத்துவம் எல்லாம் கட்டுடைத்து வடிந்தது. தாமரை அவனைவிட இரண்டு வயதில் மூத்தவள் ஆனாலும் அவள் ஓர் பெண்மணி என்பதினாலும் துயரத்தில் இடம் அறியாமல் தன் பெண்மையை மறந்து ஒற்றைப் பிள்ளையை பறிகொடுத்த தாயாய் அவன் கால்களை இறுக்கிப்பிடித்தபடி அவனிடம் மன்னிப்பு கேட்பதாய் மண்டியிட்டு அழுது கொண்டிருப்பதை புரிந்து கொண்ட பின்னும் தொட்டு ஆறுதல் செய்யவில்லை. அது பெண்ணியக் கனப்படுத்தல் பண்பாடு. அப்படியே பக்கத்தில் இருந்த பந்தல் காலை இரண்டு கைகளாலும் இறுக்க பிடித்து மலைத்து போய் இருந்தார் வீரராகவன். மாறனின் தந்தை கனரக வாகன சாரதி இடைவேளையில்லா இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் அவர் பற்களின் வண்ணத்தையே வெற்றிலை காவி மாற்றியிருந்தது. அதன் இடுக்குகளில் கூட இன்னும் மிகுதித்துகள்கள் செருகியிருந்தது. தாமரையை தட்டி போதும் விடு என வீரராகவரை விடுவித்து கண்களால் வாட்டமுற்று, வெட்கி, பறிபோயிட்டான் ஐயா என்ர புள்ள...... அவள் விட்டதை தொடர நினைத்தும் பேச முடியாதவராய் அருகிருந்த இருக்கையில் அமர்த்தி விட்டு என்ன மன்னிச்சிடுங்க ஐயா என கும்பிட்டு கண்ணீர் சிந்தினான் மணியம். வீரராகவர் பதில் இன்றி அவர் கைகளை இறக்கி விட்டு தோள் தட்டி தேற்றினார். எதை சொல்வது நான் சொல்ல கேட்கவில்லை என்று திமிர் கொள்ள அவருக்கு தெரியாது. அழ வேண்டாம் கவலைப்பட வேண்டாம் என்று சாதாரணமாக தேற்றுவதும் அர்த்தமற்றது. அமைதியைத்தான் பதிலளிக்க முடியும் அத்தோடு தான் எதனையும் மனதில் வைக்கவில்லை அவன் பிரிவு எனக்கும் ஆற்றொண்ணா துயரம் தான் என்று நிறைந்த கண்களின் ஈரத்தினால் பேசி அமர்ந்தார்.
அன்று மாறன் வழக்கம் போல் பாடசாலைக்கு பிந்தியே வந்திருந்தான். ஆனாலும் அவன் கண்களில் ஒருவித தூக்க மயக்கம் கைகளில் இனிப்புகளுடன் அதிபரின் அறையில் தண்டனைக்காக நிறுத்தப்பட்டிருந்தான். அந்த வழியே வந்த வீரராகவன் அவர் பாடசாலை ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர் பார்ப்பதற்கு பெயரைப் போன்று வீரத்தோற்றம் ஒன்றும் அவரிடம் இல்லை மிகவும் மென்மையானவர். மெலிதான உடல்வாகு. உயரம் நடுத்தரமானவர். அவர் நிறத்தில் கொஞ்சம் கருமை அடர்த்தியானவர் என்பதனால் சற்றுமிடுக்காகத் தெரிந்தார். எப்பொழுதும் கைகளில் கிளுவை மரத்தடிகளுடன் தான் அவரை காண முடியும் பாம்புகளை அடிப்பதற்கு இதை பயன்படுத்துவார்களாம் வேலிகளில் அதிகம் இந்த கிளுவைகளை காணலாம். இது பாம்பிற்கு நச்சுத்தன்மையானதாம் தடியோடு திரிவது வழக்கமான வீரராகவன் சித்திரத்தில் சிங்கம் போன்றவர். ஒருநாளும் எந்த மாணவனையும் அடித்ததே இல்லை அன்று மாறன் அவர் கொள்கைக்கு சவாலாய் என்ன மாறும் ஏன் வகுப்புக்கு போகலையா ஒரு மாதிரியாய் இருக்கிறாய் என்று அவனை தொட்டுப் பார்த்தார். மாறன் அவர் கையை வேகமாக ஆத்திரத்தோடு தட்டி விட்டான். ஆச்சரியப்பட்ட வீரராகவன் புரிந்து கொண்டார் சரி நீ ஏதோ குழப்பமாக இருக்கிறாய் நான் அதிபரிடம் பேசி உன்னை வகுப்புக்க அனுப்புகிறேன் என அலுவலகத்தில் சென்று அதிபரிடம் அவனை தான் கவனிப்பதாக வாக்குறுதி அளித்தார் அவரோடு பேச அவன் அனுமதிக்கவில்லை கடுகடுத்தான் மறுநாளும் இது போலவே தாமதமாய்... வீரராகவன் அவனை அவதானித்தார். இவனது நண்பர்கள் பற்றி இவனது போக்குகள் வரத்துகள் பற்றி கண்காணித்தார். அவனுக்கு மறைமுகமாக நேரடியாக பல்வேறு புத்திகளையும் சொன்னார். ஒருநாள் அவர் தாமரை செல்வியை அழைத்து மாறனின் போதைப் பழக்கம் போதை வியாபாரிகளுடன் நட்பு எல்லாவற்றைப் பற்றியும் அவளுடன் பேசினார் அவள் அமைதியாய் கேட்டாலும் என்ர புள்ள அப்படி செய்ய மாட்டான் என அசட்டையாய் எடுத்துக் கொண்டாள். இப்படி வீரராகவனின் முயற்சிகள் பல மாறனோடு இருந்தது. ஒரு நாள் மாறன் வீரராகவன் தன்னை பார்க்க வேண்டும் என்றும் இவர் என்னத்தை செய்யப் போகின்றார் என்றும் அவரை அவமதிக்கும் எண்ணத்தில் அவருக்கு முன்பதாகவே போதையை புகையாக முகர்ந்து இழுத்து கையைத் தட்டி விட்டு வகுப்புக்குள் சென்று கொண்டிருந்தான் ராகவன் பிரம்பும் மனமும் பொறுமையை இழந்து மாறனை கண்டபடி பதம் பார்த்து விட்டது.
அன்று அதிபரும் விடுமுறை. மாறன் அனுமதி இன்றி பாடசாலை நேரத்திலேயே தனது புத்தகப் பைகளை எடுத்துக்கொண்டு ஆத்திரமாக வீட்டுக்கு திரும்பி விட்டான். தரம் பத்தில் கற்பவன் அவன். பாடசாலை விடும் நேரம் ஏதோ அவனை அடித்த சஞ்சலத்திலும் அவன் கோபமாக கடந்து சென்றதை நினைத்தும் மேலும் இந்த நடத்தைகளை எப்படி மாற்றலாம் என்ற சிந்தனையோடும் ஆழ்ந்திருந்த வீரராகவன் தொடர்ந்தும் தனது முயற்சிகளை அவன் நடத்தையை மாற்றி விட வேண்டும் என்ற நோக்கிலே நகரத்தினார்.அப்போது மாறனின் தந்தை மணியத்திடம் பேசலாம் என நினைத்தார் சாரதி மணியம் அவனும் மது விரும்பி அன்று மணியம் முழுபோதையில் இருந்தான். இதை அறியாமல் அவனை பாடசாலைக்கு வருமாறு அழைத்தார் வீரராகவன். மாறனை கையோடு அழைத்து வந்த மணியம் என்ட புள்ளைய கைநீட்டி அடிக்க நீ யாரடா என பாடசாலையில் அனைவரும் பார்க்க ஓங்கி அறைந்தார். வீரராகவன் அவரது அடி வேகத்தில் பக்கத்தில் இருந்த மாதிலில் ஆசிரியர் சாய்ந்து கொண்டார். சக ஆசிரியர்கள் தடுத்து விட்டனர். இப்படி நல்வழிப்படுத்த நினைத்த வீரராகவன் இறுதியில் அவர் மாறனை அடித்த குற்றத்திற்காக தண்டப்பணமும் செலுத்தினார். என்ன நடைமுறை சட்டமோ ஆசிரியத்துவம் மதிப்பற்று நாளைய தலைமுறை என்னாகுமோ என்ற ஏக்கமே வீரராகவனுக்கு. வேறு எந்த அவமானமும் அவர் சிந்தைக்குள் நுழையவில்லை. இப்படி நடந்து இரண்டு தினங்கள்தான் இன்று வீரராகவன் என் அவமானங்கள் பொறுமை கூட வீனாகிவிட்டதே. முயற்சிகள் எதுவும் பயன் தரவில்லையே. என்று கவலையில் பக்கத்துக் கதிரையில் இருந்தவரை நிமிர்ந்து பார்த்தார்.
ஓம்மைய்யா இவன் கஞ்சா வித்தத பொலீஸ் பார்த்துட்டானாம். இவன் பிடிபட்டால் பெரிய கைகளும் மாட்டி விடும் என்று இவன் கொண்டு போட்டு ரயில எறிந்து விட்டார்களாம் என்றார். அம்மா அப்பாவும் செல்லம். அவன் ஒரு புள்ள என்பதுல அவன் நினைத்ததை செய்ய விட்டுடினம் இப்ப பாருங்க.. உங்களுக்கு நடந்ததும் கேள்விப்பட்டேன். மாதா பிதா செய்தது மக்களுக்கு என்றார் அதே வெற்றிலை வாயுடன் அவர். அவரைத் தட்டி அப்பா உங்கள வரட்டாம் என்றான் யுகன். அவனும் மாறனின் சாயலானவன் வீரராகவன் தொடர்ந்தார் மற்றவர்களுடன். பாவம் இன்னும் பல அடிகள் நிச்சயம் ஆலோசகருக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக