வானம் பாடிக் கூட்டங்கள் போல் வாழ்ந்து அனுபவிக்கும் சிட்டுகளிடம் ஓர் சின்ன பரிசோதனைக்காய் ஆயத்தமானாள் அர்த்தனா.கிராமத்து பாடசாலையில் 2 மணிநேரம் அவளும் சிறுமியாய் உணர்வு கலக்கும் தருணம் அது. விளையாட்டுக்களும் வினா விடைகளும் குழுக்களாய் தனியாய் மகிழும் தருணமானது அந்த கணங்கள்.
சூரியனும் நிலவும் ஒரே வானில் தானே சூரியக்கதிர்கள் ஏன் சுடுகின்றது? நிலவு துகள்கள் ஏன் குளிர்கின்றது? என அறியாதவள் சுடும் என்ற பின்னும் தொட்டுப் பார்த்து அனுபவம் காணத் துடிக்கும் விட்டிலாய் அசைவெல்லாம் ஆரோகணம் உச்சம் காட்டிக்கொண்டு அனைத்துக்கும் கையை உயர்த்தி தன்னை பிரதிபலித்துக் கொண்டு இருந்தாள். கீர்த்தி. வயது 12 தான் 16 வயது மாணவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு போட்டியாய் முன் அணியில் மின்னிக் கொண்டு இருந்தாள். ஆனாலும் இமைத்து மூடும் விழிகளில் அவள் துடிப்பு தாண்டிய துறவறம் சிரிப்பில் விரித்துச் சுருக்கும் இதழில் மின் துண்டிப்பு நாடகம்.
அர்த்தனா அறுபது மாணவர்கள் மத்தியில் குழந்தையாய், ஆசானாய், தாயாய், சகோதரியாய், வித்தைகாரியாய் கற்பித்துக் கொண்டே அவர்களில் ஒவ்வொருவரையும் கற்றுக் கொண்டு இருந்தாள். அவள் அமைதியை வசனமிட்டு வாசிப்பவள் கண்களின் மொழி புரிதல் கைவந்த கலை அவளுக்கு. கீர்த்தியின் மின்வெட்டு புன்னகையை விரித்துத் தெளிந்து வாசித்தாள். அவளிடம் ஏதோ ஓர் ஈர்ப்பு அர்த்தனாவுக்கு ......... கருத்தரங்கின் அந்தி நேரம் நெருங்கியது நன்றியுடன் விடை பெற அனைவரையும் ஒன்று சேர்த்தாள் அர்த்தனா. பிள்ளைகளில் சிலர் மிஸ் மிஸ் என்றும் சிலர் டீச்சர் என்றும் பலர் அக்கா என்றும் அவள் ஓரமாய் கூடி நெருங்கி கருத்தரங்கையும் அவளையும் கருத்தாக்கிக் கொண்டனர். அர்ச்சனாவின் சேலை நுனியை பிடித்தபடி உங்க புடவை ரொம்ப அழகா இருக்கு! நான் உங்களை எப்படி கூப்பிடலாம் என்று நெருக்கினாள் கீர்த்தி. அர்த்தனாவின் ஐயம் உறுதியானது. நீங்கள் எப்படி விரும்புகிறீர்கள் என் பெயர் அர்த்தனா உங்களுக்கு விருப்பம் என்றால் அப்படியும் கூப்பிடலாம் என்று கீர்த்தியின் எண்ணத்தில் உரிமை எடுத்துக் கொள்ள எத்தணித்தாள்.
பாடசாலை நிறைவு மணி காற்றோடு காதுகளை வந்தடைந்தது அர்ச்சனாவின் கவனமெல்லாம் மறைமுகமாக கீர்த்தி மேல் இருந்தது அவள் சிரிப்பில் ஒரு மின் துண்டிப்பு திடீரென உறக்க நிலைக்கான அவள் விழிகளின் பயணம் கீர்த்தி சற்று முன் நிலைக்கு எதிர்மறை தோற்றம் காண்பித்தாள். இந்த மாற்ற நிலை அவளை படம் போட்டு திரையிட்டது நிகழ்வுகள் நிறைவடைந்து அனைவரும் விடை பெற்றனர். அர்த்தனா அவள் நினைவுகளை கீர்த்தியிடம் விட்டு விட்டு அவளும் கடந்து சென்றாள். அன்று இரவு பகலானது ஏதோ ஓர் சலனம் விடியலும் சலிப்பாக ஏதோ ஒரு உந்தல் கீர்த்தியை பார்த்தால் என்ன எப்படி என்று சிந்தித்தபடி பாடசாலைக்கு கடந்து சென்றாள் அதிபரின் அனுமதிக்காக காத்திருந்தாள். அறிமுகமானவர் அர்த்தனா அங்கு பிள்ளைகள் பலர் ஓடி வந்து அர்த்தனா மிஸ்.... சிரித்து குழைந்து உங்களைத் தெரியும் என்றும் மீண்டும் அறிமுகம் செய்வதாய் அழாவளாவிச் சென்றனர். மனம் கீர்த்தியின் பால் இருந்ததால் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை சிரித்து விடையளித்தாள்.
கூட்டமாய் பேசிய சிலருடன் தனியாகப் பேச அதிபரிடம் அனுமதி பெற்றாள் அர்த்தனா இரண்டு மூன்று பிள்ளைகளுடன் நாம் பேசிவிட்டு கீர்த்திக்காய் காத்து இருந்தாள். அதே குறும்பு என்னை விட யாரும் இல்லை மகிழ்ந்திருக்க என்று மரம் செடி கொடிகளை இரண்டு கைகளாலும் கிள்ளிக் தட்டி காற்றுக்கும் ஊற்றிக்கொடுத்து ஓடிவந்து "அர்த்தனா அக்கா........ என்று உரைக்க அழைத்தாள். வாங்கம்மா எப்படி இருக்கீங்க உட்காருங்கள் பேசலாம் என்று இருக்கையை விரல் நீட்டினாள் "தனியா என்ன அக்கா பேசணும்" ? கீர்த்தி அக்கா உங்களோட மட்டும் இல்லடா எல்லார் கூடவும் பேசுவனம்மா இப்போ உங்கள் நேரம் என்றாள் அர்த்தனா.
அப்படியா அக்கா எப்படி என்னுடைய பெயர் கீர்த்தி என்று நினைவு வச்சிருக்கீங்க என்ன? எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் இண்டைக்கும் நீங்க சூப்பரா புடவை கட்டி வந்து இருக்கீங்க என்று நெகிழ்ந்து நெருக்கமானாள்.
இன்னும் ஏதோ நம்பிக்கை ஈர்ப்பு நெருக்கம் அர்த்தனாவின்பால் ஈர்ந்தது அவளை... அர்த்தனா அக்கா என்று தொடர்ந்தாள்....... எனக்கு அக்கா இல்ல உங்களை என்னோட அக்காவா நினைக்கவா? எங்க வீட்டுக்கு நீங்க வர முடியுமா? என்றாள். நிச்சயமாக ஒருநாள் வருகின்றேன் பதிலளித்த படி கீர்த்தி வீட்ல யாரெல்லாம் இருக்கிறாங்க கதை நகர்த்தினாள் அர்த்தனா.
என் வீட்ட நானும் அம்மாவும்....... உடன் நிசப்தமாய் நிறுத்திக் கொண்டாள். அர்த்தனா சிந்தித்தாள் எப்படிக் கேட்பது ஏன் அப்பாவைப் பற்றி ஏதும் சொல்லாமல் நிறுத்திவிட்டாள் அப்படியே சிந்தித்தபடி உங்க அப்பாவின் தொழில் என்ன? என கேட்டாள். கீர்த்தி நேர் எதிர் உணர்வுகளை கூட்டிப் பெருக்கி கழித்து புரியாத விபரிப்பால் விழுங்கி உமிழ்ந்தாள்.
சில வினாடிகள் தனித்து அப்பா!.... வெளிநாட்டில் என்றாள். ஓ கீர்த்திமா அக்கா உங்கள கஷ்டப்படுத்தியது போல் பேசிட்டேனா? உடலை நிமிர்த்தி முன் சாய்ந்து அவள் கண்களை எதிர் நோக்கினாள். அக்கா தொனி குறுகி மிகவும் அடங்கி ஒலித்தது. கீர்த்தி இன்னும் இறுக்கி மூடிக்கொண்டாள் அர்த்தனா அவளை திறக்க முனைந்தாள். காலையில் என்ன சாப்பிட்டீங்க கீர்த்தி? இடியப்பம் அக்கா.... உங்களுக்கு விருப்பமானவங்களை பற்றி பேசுவமா? மறுநொடியே ஓ..... ஆமா எனக்கு எலான் மாஸ்க் பிடிக்கும் எனத் தொடங்கி டாட்டா வரை பெரும் புள்ளிகளை விபரணமாக்கினாள் கீர்த்தி. 12 வயதில் இத்தனை காத்திரமான அறிதல்கள் அவளிடம். அர்த்தனா முப்பதுகளின் பின்புதான் பிரபலங்களைத் தேடி படித்திருப்பாள். அவள் தொடர் துடிப்பு தேடல்களின் கார்த்திரம் திடீர் திடீர் அமைதி லாவா குழம்புகளின் கசிவு......... அர்த்தனா அவள் எண்ணச் சுனையில் அமைதியாய் சுழி ஓடிக்கொண்டிருந்தாள்.
அர்த்தனா அக்கா என்ன யோசிக்கிறீங்க அப்பா எனக்கு மடிகணனி வாங்கி கொடுத்து இருக்காரு அதுல தான் இது எல்லாம் பாப்பேன் என்றாள். அவளின் மனநிலை இப்போது வேறு ஒரு பிரதிபலிப்புடன் இன்னும் ஆழம் செல்ல ஆயத்தமானாள் அர்த்தனா தட்டிக் கொண்டே இருந்தாள்.
அந்த நேரம் அர்த்தனாவின் அலைபேசி அழைத்தது அவளை கீர்த்திமா அக்காவோட அப்பா கூப்பிடுறாங்க கதைச்சிட்டு வரட்டா அனுமதி எடுத்தாள். "ஓமக்கா தாராளமா கதைங்க...........? சாப்பிட்டியாமா? இனிமேல்தான்பா... இங்கு ஒரு தங்கா கூட பேசிட்டு இருக்கேன்பா.... சரிமா அந்த பிள்ளை சாப்பிட்டதோ தெரியல இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு பேசுங்க...... அப்பாவின் தொடர்பாடல் அலைபேசி தாண்டி கீர்த்தியின் செவி வழி புகுந்தது அவள் நெஞ்சை நெருடி உடைத்து திறந்தது குனிந்தபடி இருந்தாள் கீர்த்தி. அலைபேசியை அணைத்து அர்த்தனா, கீர்த்தி.... என்றாள். கருவிழி கண்ணீரில் மிதந்து கொண்டு இருந்தது அர்த்தனாவின் முயற்சிக்கு அப்பாவின் குரல் ஆதரவளித்தது போல மெல்ல திறந்தது அவள் இரும்புத் தாழ்பாள் இட்ட உள்ளக் கதவுகள்.. கீர்த்தியின் கைகளை பற்றியபடி, நம்புமா.... அக்காவ என்னாச்சும்மா? நேரடியாகவே வினா கொடுத்தாள்.
கோடை வானம் மாரி போர்த்திக் கொண்டதுபோல் கண் தூறலனனாள் கீர்த்தி.தேக்கத்து சேமிப்பு கழிமுகம் காணுமா? எங்கே அவள் துடிப்பு? இருள் மறைத்து ஏமாற்றி இதம் காட்டிய பல்வரிசை எங்கே? மின்மினியாய் சிமிட்டி சிரித்த கருவிழி எங்கே? கதவுகள் மடைதிறந்த வாவியாய் பெருக்கெடுத்தாள்..... இத்தனை அடைசல்களின் காரணம் தான் என்ன? தேடலின் ஆழத்தில் அர்த்தனா அவளை என்ன செய்ய அணைக்கவா? கண் துடைக்கவா? தலை கோதவா? செய்கைகள் ஏமாற்றியவளாய் எழுந்து கீர்த்தியின் ஓரமாய் போய் தோள்களைத் தழுவிக்கொண்டாள். முட்டியிட்டு முகத்தின் முன் மண்டியிட்டபடி மனம் திறப்பாயா என்று பார்வை தெளித்தாள்.
அர்த்தனாவின் தொடுகை பார்வை இருக்கை நிலை இன்னும் இறுக்கம் தளர்த்தியது கீர்த்தி சற்று அமைதலானாள். மொழி கடந்த அர்த்தனாவின் உரையாடல் அவளுக்கு உணர்வழித்ததோ என்னவோ "ஒன்று சொல்லட்டுமா அக்கா......." என்று விம்மினாள் கீர்த்தி. அவளைத் தழுவியபடி சொல்லுமா அக்கா கூட இருக்கேன் என்று ஆறுதலாய் தாயானாள் அர்தனா.
என்னோட அப்பா செல்வம், நான் அவரை நேரில் பார்த்ததே இல்லை அக்கா அம்மா ஜெனிதா, அப்பா விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். அப்பாவுக்கு அக்காக்கள் நான்கு தங்கைகள் நான்கு நடுவில் என் அப்பா ஒற்றை ஆண் பிறவியாம். அவங்க குடும்பம் பெருசு தானே அக்கா அண்டைக்கு சாப்பிடவே கஷ்டமாங்க.. அப்பாட யாரோ ஒரு நண்பன் கப்பல்ல அவுஸ்திரேலியாவுக்கு போக வெளிக்கிட்டாராம் அப்பாவையும் கூப்பிட்டாராம் பெரிய அத்தை சின்னத்தை அம்மம்மா எல்லாரும் அப்பாவை போகச் சொன்னாங்களாம் அம்மா மட்டும் அமைதியாய் இருந்தாங்களாம் ஏன் என்றால் கல்யாணமான நான்கு மாதத்தில் பாவம் அம்மா அவங்க கற்பமா இருக்கிறாங்க என்டு கண்டுபிடிச்சே பத்து நாள்தானாம் அப்போ... அப்பா அடுத்த மாதமே வெளிக்கிட்டாராம் எல்லாருக்காகவும் அம்மாவும் ஒத்துக் கொண்டார்களாம். இப்பவும் அம்மா..,... ஏதோ சொல்லாமல் விழுங்கிக் கொண்டாள் 12 வருஷம் ஆச்சு இன்னும் அப்பா வரலக்கா அவர் வர ஏதாவது செய்யலாமா?
தேம்பித் தேம்பி அர்த்தனாவின் இயல்பை தூண்டி கண் நிறைக்க கதை சொன்னாள் கீர்த்தி.
அர்த்தனா கீர்த்தியின் கைகளை விடவே இல்லை 12 வயது தோற்றம் இல்லை பார்ப்பதற்கு 16 வயது காண்பிக்கும் தோரணை பிஞ்சு இன்னும் என்ன சொல்லி இடி போடப் போகிறாளோ? என் இதயத்தில் என்று ஏக்கத்துடன் ஒத்துணர்வழித்தாள். கீர்த்திமா அழாதடா நீண்ட நேர அடைமழையின் பின் குடைபிடிப்பதாய் ஓர் இடைநிறுத்தம் அழாதமா என்றாள் அர்தனா? அடுத்த நொடியே அவலக் குரலில் அக்கா என்று எத்தணித்தாள்..... சாமத்தியம் ஆகாட்டால் குழந்தை பிறக்குமா? பெரும் வினா
ஏன் இந்த மழலைக்கு மனசோரம் பேர் இடியோ? இத்தனை பாரமான ஐயப்பாடு வினாவினாள்? கண்கள் விரிய கைகள் குளிர்ந்து ஈரமாக வெட்கத்துடன் ஏக்கமாய் பார்த்தாள் கீர்த்தி. அர்த்தனா இன்னும் புரிந்து கொண்டாள். பூப்படையாத கீர்த்தி..... அர்த்தனாவின் கைகளை இறுக்கிக் கொண்டாள் உடல் நடுங்கியது சாரலும் தூவானமுமாய் மூக்கு சிந்த உரத்து அழுதபடி அர்த்தனாவின் பிடியை நகர்த்தி தன் இரண்டு கைகளாலும் வாயை இறுக்கி மூடி ஓலமிட்டபடி உரத்த சத்தத்தையும் உணர்வையும் அடக்கி கொள்ள நினைத்து முடியாதவளாய் கொதிநீர் குவளயாய் தெறித்து வெடித்தாள் கீர்த்தி. வகுப்பறை நிறைத்த ஓலம் அர்த்தனாவின் அனுபவத்தில் இப்படி ஒரு துணைநாடியை சந்தித்ததேயில்லை அங்கலாய்த்துப்போன அவள் கீர்த்தியை மார்போடு அணைத்துக் கொண்டாள் முதுகு தட்டி தலைகோதி என்னம்மா ஆச்சு அக்கா கூட இருக்கேன்மா என வார்த்தை வஞ்சம் செய்ய மூர்ச்சை இழந்து விட்டபடி இடியேறுமரமாய் மலைத்துப் போனாள். பிஞ்சு வெடித்து சிதறுகின்றதே என்ன இது இறைவா என்று விண்ணப்பம் செய்தாள். அழுகையுடன் அக்கா யாரிடமும் சொல்ல மாட்டீங்களே தயங்கித் தவிர்த்து விக்கி விழுங்கினாள் கீர்த்தி .அர்த்தனா நெற்றி நீவி பக்கம் போனாள் பார்வையால் உறுதியளித்து பதிலளித்தாள். நம்புடாமா என்றாள்.
அக்கா என் அம்மாவுக்கு ஒரு நண்பர் அவர் அடிக்கடி வீட்டுக்கு வருவார் ஒரு நாள் அம்மா இல்லாதப்போ அவர் என்ன...... நீள அழுதாள் கைகளால் இறுக்கி வாய்மூடி ஓலமிட்டாள் இறைவா அர்த்தனாவால் அவளை அணைக்க மட்டுமே முடிந்தது. அணையாத தீயை அணைக்க அவளால் கூடாமல் போனது. கீர்த்தி சொற்களை பற்களில் சிக்கி நாக்கில் தடுக்கிக்கொள்ள அணை கடந்த வெள்ளமாய் காட்டாறாகினாள். கீர்த்தியின் ஓலம் அர்த்தனாவுக்கு காட்சியாய் ஓடியது.
வஞ்சகன் தன்னை வக்கிரமாய் சிதைத்ததை சின்னாபின்னம் செய்ததை சொல்லாமலேயே சொல்லி முடித்தாள். அதிர்ந்து வேளம் உண்ட வெள்ளிக் கனிபோல் உள்ளீடற்று ஊமையானாள் அர்த்தனா.
குடும்பம் காக்க வெளிநாட்டில் தந்தை நண்பர் வடிவில் வக்கிர தாண்டவங்கள். தாயின் தோழன் பெயரில் தாய்க்கொரு தாலாட்டு இரண்டாம் உடல் துணை. கனி சுவைத்த குரங்கிற்கு பூவின் மேல் ஒரு வெஞ்சம். மாலையாகு முன் பிய்த்து சிதைத்து உதிர்த்து போட்டதோ....
ஆற்றல் இழந்த ஆற்றுப்படுத்துணராய் ஈரமாக்கப்பட்ட கண்ணீர் கசியும் சேலை தலைப்பினால் கீர்த்தியின் முகத்தை துடைத்து வார்த்தையால் தாலாட்டி மடியோடு அவளை சாய்த்து கொண்டாள்.
நீறுபூத்த நெருப்பாய் எப்படி தன்னை காட்டிக் கொண்டாள். நீர் அடி பனிப்பாறையில் மிதந்தும் தெரியாமல் மறைந்தே இருந்தது இவள் மனக்குமுறல்கள். மூச்சுக்காற்றில் அக்கினி வீசியபடி புயலுக்கு அப்பால் அமைதலான கடலாய் விழிகளை இறுக்கி மூடி திறந்த வாயினால் சுவாசித்தபடி வண்டு கலைத்த மகரந்தம் தொலைந்த இடம் தேடும் தென்றலாய் இமைக்கா பார்வையை அவள் மீது குவித்து மடி தாங்கி நின்றாள் அர்த்தனா.
பிரம்மியா சண்முகராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக