1/04/2023

திருஞானசம்பந்தன் – லலிதகோபன் “அம்மாவுக்குப் பிடித்த கனி”

 

ஒரு மொழி தொடர்ந்து  வாழ வேண்டுமானால் அது அடுத்த தலைமுறைக்கு சென்று சேரவேண்டும்.அடுத்த தலைமுறையான நமது சிறார்களுக்கு நமது தமிழ் மொழியை அவர்கள்  கற்பதற்கு எந்தளவு கரிசனை  காட்டுகிறோம்?நாம் இந்த வகையில் படுதோல்வி அடைந்து வருகிறோம்.

ஒரு மொழியின் அடிப்படை வடிவமே அதன் எழுத்து வடிவமே.எழுத்து வடிவத்தில் சிறார்களிடம் கொண்டு சேர்ப்பதில் பாடத்திட்டத்துக்கு அடுத்து முதன்மை வகிப்பது சிறுவர் இலக்கியமாகும்.அதனைப் புரிந்து கொண்டு சிறுவர் இலக்கியங்களை படைக்க வேண்டும்.அப்படி படைத்து சிறுவர்களை சிறுவர் இலக்கியங்களின்பால் ஈர்த்தெடுத்தல் நமது பொறுப்பாகும்.( கலாபூஷணம் கேணிப்பித்தன் .அருளானந்தம், ஈழத்தில் சிறுவர் இலக்கியம் நூலிலிருந்து)

இந்த எடுப்புரையிலிருந்து கவிஞர் ஷெல்லிதாசன் அவர்களின் இந்த ஆண்டுக்கான சாகித்ய விருது பெற்ற சிறுவர் பாடல்கள் நூலான “அம்மாவுக்குப் பிடித்த கனி” என்ற நூலுக்கான குறிப்பினை தரலாம் என நினைக்கிறேன்.

இன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் இலக்கிய வளர்ச்சி என்பது சிறப்பாக கூறக்கூடிய வகையில் உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை; ஆனால் வெளிவரும் எத்தனையோ நூல்களில்  சிறுவர் இலக்கியம் சார்ந்த நூல்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும்.தொழில்நுட்ப மாற்றங்களும் முடிக்கப்படாத பாட்த்திட்டங்களுமென  சிறுவர்களையும் மாணவர்களையும் வாசிப்பு விட்டு வெகுதூரமாய் நகர்ந்துபோன நிலையில் , சிறுவர் இலக்கிய நூல்களின் வருகையும் குறைந்துபோவது ஆரோக்கியமான போக்கல்ல.இது இளைய தலைமுறை இன்னுமின்னும் வாசிப்பு மற்றும் படைப்பிலக்கியத்தில் இருந்து அந்நியமாவதற்கே வழிகோலும்.எனினும் இந்த நிலையினை ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்வதற்கு சில படைப்பாளிகள் முன்வருகின்றமை மகிழ்ச்சிக்குரியதே.

அண்மையில் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டு இந்த வருடத்துக்கான இலங்கை  அரசின் சாகித்திய விருதினை பெற்ற “அம்மாவுக்குப்  பிடித்த கனி “  என்ற சிறுவர் பாடல் தொகுதியானது முன்பள்ளி மற்றும் ஆரம்பநிலை மாணவர்களை இலக்காக கொண்டு எழுதப்பட பாடல்களின் தொகுப்பாகும்.பாடல்கள் மூலமான இலக்கியம் என்பது புரிவதற்கு இலகுவானதுடன் குழந்தைகளின் மனதில் தங்குவதற்கு பிரியமான வடிவமும் கூட .

இந்த தொகுதியில் உள்ள “பாட்டா சொன்ன கதை” என்ற பாடலானது எமது முந்தைய தலைமுறையின் வாழ்வியல் தொடர்பான அனுபவங்களை மீட்கும் ஒன்றாக இருக்கிறது.முற்கால வாழ்வியலை தற்காலத்தில் மீளுருவாக்கம் செய்தல் என்பது இயலாத காரியமெனினும் கூட  , அவர்களின் வாழ்வியல் போக்குகளை அறிதலானது எமது இளைய சந்ததி தனது வாழ்வியல் அறங்களை கட்டமைத்துக்கொள்ள உதவும் என்பதே இதன் பின்னால் இருக்கின்ற தத்துவமாகும்.

ஒரு கொத்து அரிசி விலை

பதினைந்தே சதந்தானாம்  

சீனி விலை சதம் பத்தாம்

தேங்காய் சதமிரண்டாம்

தற்கால சந்ததி நினைத்தும் பார்க்க முடியாத இந்த விடயங்கள் உண்மையில் கதையல்ல நிஜம்.முற்றிலும் நுகர்வு போக்கிற்கு மாறிவிட்ட தற்கால சமூகத்தில் இவ்வாறான விடயங்களும் பதிவுகளும் இவ்வாறான பாடல்கள் மூலம் கடத்தப்படுவதற்கான தேவை ஒன்றுள்ளது.ஏனெனில் குழந்தை பிறந்து இரண்டாவது அகவையிலேயே பாடசாலை எனும் சிறைக்குள் அனுப்பப்படுகின்ற நிலையில் வீடுகளில் கதைகள் சொல்லும் சூழல் இன்றில்லாது போய்விட்டது.கதைசொல்லுதலை விடவும் குழந்தைகளுடன் பெற்றோர் உரையாடும் நிலை கூட வீடுகளில் இல்லை.இந்ந நிலையில் இவ்வாறான பாடல்கள் மூலமாவது ஒரு உரையாடல் வெளியும் அனுபவ பகிர்வும் கிட்டுவது ஆரோக்கியமானதே.

தனது உடுப்பை தானேதான்

கழுவிப்போட்டு   காய வைப்பார்

தினமும் கிணற்றில் நீரள்ளி

குளித்து முழுகி அவர் வருவார்

இந்த பகுதியில் நமது தலைமுறைக்கு இரண்டு விடயங்கள் நினைவூடப்படுகின்றன.ஒன்று ஆரோக்கியம் மற்றது கிணற்றினை பாவித்த தொன்ம படிமங்கள்.இன்றைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் இந்த தலைமுறை மனிதர்களை இளம் வயதிலேயே நோய்கட்கு ஆளாக வைப்பதுடன் அவர்களை இன்னொருவரின் உதவியில் தங்கி வாழும் நிலைமைக்கும் தள்ளி விடுகிறது.ஆனால் நமது முன்னையோரின் வாழ்வியல் ஆரோக்கியத்தினை இந்த வரிகளில் சுட்டிக்காட்டுகிறார் கவிஞர்.மேலும் முன்னைய நாட்களில் புழக்கத்தில் இருந்த கிணறுகள் இன்று பெரும்பாலான வீடுகளில் மூடப்பட்டு இருப்பதை காண்கிறோம்.இலகு மற்றும் வேலைப்பளு என்ற காரணங்களின் நிமித்தமாக எல்லோரும் குழாய் நீர்ப் பாவனைக்கு மாறுவது சரியா என்ற கேள்வியினை இந்த வரிகளின் மூலமாக முன்வைக்கிறார் கவிஞர்.

பறவையினங்கள் பலநூறு-அதில்

பாங்காய் வசிக்கும் கூடுகட்டி

கலகலப்பான ஒரு வீடாய் – அது

காண்பவர் மனசை கவர்ந்திழுக்கும்

ஆலமரம் என்ற பாடலில்  வருகின்ற  வரிகள் இவை.இவை நேரிடையாக ஆலமரத்தினை குறித்தாலும் இதில் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய இன்னொரு உட்பொருளும் உண்டு.பொதுவாக ஆலமரமானது வாழ்வியல் நீட்சி மற்றும் பரம்பரைகளின் தொடர்ச்சிக்கு உவமையாக கூறப்படுவதுண்டு.ஆனால் தற்காலத்தில் மனித சமூகம்   ஒற்றை மரமாக தனித்து விடப்படுள்ள்ளது.முன்னைய நாட்களில் இருந்த கூட்டு குடும்ப முறையினை  இந்த வரிகளினூடாக நினைவுகளுள் மலர்த்தி விடுகிறார் கவிஞர்.கூட்டுக்குடும்ப வாழ்வியல் என்பது விட்டுக்கொடுப்பு மற்றும் புரிந்துணர்வு என்பவற்றின் அடிப்படையில் இருந்தமையினால் அது எப்போதுமே காண்பவர் மனசை கவர்ந்திழுக்கும் ஒன்றாகவே இருந்தது.இந்த இடத்தில் கவிஞரின் சொல்லாடல் முறையினையும் கவனிக்க வேண்டும்.மனசை என்ற சொல்லுக்கு பதிலாக மனதை என்றும் பாவித்திருக்க முடியும். ஆனால் அதில் பாண்டித்தியம் இருக்கும் ஆனால் புழக்கம் இருக்காது.கவிதைகள் வாசகன் மனத்துடன் நெருக்கம் கொள்வதற்கு அதிகம் பேச்சு வழக்கில் புழங்கும் சொற்களை புகுத்தி எழுதினால் கவிதையும் வாசகனுடன் அதிகம் நெருக்கமுறுகிறது  .

“மரம் இயற்கை தந்த வரம்” என்ற கவிதை மரங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து பேசுகிறது.

“உயிர்  மூச்சை தருவதும் மரங்களடா

உலகத்தின்  குடை நிழலும் மரங்களடா”

ஒரு கவிதையின்  அல்லது பாடலின் முதல் வரிகளே பாடலின் மொத்த பரிணாமத்தை அல்லது கருப்பொருளினையும் தந்து விடுவதுண்டு.அவ்வாறான  ஒரு பாடலே இது.குடை  நிழல் என்பது கவிஞரின் அற்புதமான சொல்லாடலாய்  அமைந்து விடுகிறது.குடை என்பது மழை மற்றும் வெயில் போன்ற தேவைகளின் நிமித்தமாய் மனிதர்களினால் உருவாக்கப்பட்டது. ஆனால் நிழல் என்பது எந்தவித பிரதியுபகாரங்களும் அற்று சேவை ஒன்றை மட்டுமே இலக்காக்கி  மனிதர்கட்கு பயனளிப்பது.மரங்கள் இந்த இரண்டையுமே தம்முள் அடக்கியவை என்பது உயர் உவமையாகிறது.

முன் நோக்கி பாயும் நதிகள்  என்பது குழந்தைகள் தொடர்பிலான ஆளுமை விருத்திக்கு உகந்த படைப்பாகிறது.என்னை பொறுத்து இந்த தொகுப்புக்கு இந்த தலைப்பே சிறந்ததாகிறது.

"பெரும் குடிமகனின் பிள்ளைகள் பாடல்" என்ற பாடல் குடிகார பிள்ளைகளின்  தகப்பன் குறித்த நினைவாக மலர்கிறது.

"வெற்றுப் போத்தல்கள் குடிசையினோரம்

விரவிக் கிடக்கின்றன-எங்கள்

அப்பா சேர்த்த  சொத்துக்களாக

அவையே தெரிகின்றன"

இந்த பாடல் குழந்தைகளின் துயரை மட்டுமன்றி சமூகத்தின் மீதான கவிஞரின் அக்கறையாகவும் இதனை கொள்ள முடிகிறது.குடியினால் ஒரு குடும்பத்தின் அமைவு குலைக்கப்படுவதுடன் பிற்காலத்தில் அந்த குழந்தைகளே இவ்வாறான பிற்போக்குத்தனங்கட்கு ஆளாகக்கூடிய ஆபத்தும் நிலவுகிறது. ஏனெனில் பெற்றோரே குழந்தைகளுக்கான மாதிரி உருக்கள் என்பது நிரூபணமான உண்மை. மறுபுறத்தே இதனால் குடும்ப தலைவிகளும் பல்வேறு இன்னல்களை அனுபவிக்க நேரிடுகிறது.

 

"வீடு வீடாய் வேலைகள் செய்து

எங்கள் பசிபோக்க-அம்மா

படுகின்ற பாட்டை பார்த்தால் எமக்கு

அழுகையே வருகிறது"

கைவிடப்பட்ட அநாதை குழந்தை ஒன்றின் ஆதங்கம் இவ்வாறு அமைகிறது.

"நீலவானில் மீன்களுடன்

நீயும் நீந்திக் களிக்கின்றாய்

நானோ கண்ணீர் கடலினிலே

நாளும் உப்பாய் கரைகின்றேன்"

இந்த பாடல் நிலவுக்கும் குழந்தைக்கும் இடையிலான உரையாடலாக நீள்கிறது. நிலவும் கடலுடன் தொடர்புடையதாயினும் கூட அது கடலில் கரைவதில்லை.ஆனால் எதிர்கொள்ளும் சூழல் குழந்தை மனதை இவ்வாறு துயரமுற வைக்கிறது.இந்த பாடலுக்கு கவிஞர் தேர்வு செய்த உவமைகள் உச்சமாக இருக்கின்றன.

"புதிதாய் நுழையும் மாணவரை

போட்டு புரட்டி எடுக்காதீர் - நல்ல

கனவை சுமந்து வருவோரை

கண்ணீர் சிந்த வைக்காதீர்"

"வேண்டாம் பகிடிவதை" என்ற பாடலின் வரிகளே இவை.கவிஞரின் பாடல்கள் முன் பள்ளி மாணவரையும் ஆரம்ப பிரிவு மாணாக்கரையும் இலக்கு வைத்து எழுதப்பட்ட பாடல்களே.இவர்கட்கு பகிடிவதை குறித்த பாடல் ஏன் என நோக்குகையில், கவிஞரின் தூரநோக்கு புரிய வருகிறது. இப்போது மாணவர்களாக இருப்போரே நாளை இளையோராகி பல்கலைக்கழகம் செல்லவிருக்கின்றனர்.இவர்கட்கு ஆரம்ப காலத்திலேயே சமூகத்தில் உள்ள பிறழ்வு நிலைகளை உணர்த்துகையில் வளர்ந்த பிறகு ஏற்படும் நிலைமாற்றங்களை தடுக்கலாம் என்ற கவிஞரின் முற்போக்கு எண்ணங்களின் தூண்டுகையே இவ்வாறான பாடல்களின் மலர்ச்சிக்கு காரணமெனலாம்.

தற்கால சந்ததியினரிடையே வாசிப்பு குறித்த ஆர்வம் குறைந்தளவிலேயே காணப்படுகிறது. எனவே வாசிப்பு குறித்தான விழிப்புணர்வினை பாடசாலை காலத்திலேயே உருவாக்குவது அவசியமாகிறது.இதனை கவிஞர் "வாசிப்பால் வந்த வரம்" பாடலில் இவ்வாறு கூறுகிறார்.

"தோண்ட தோண்ட மணற்கேணி

தூய நீரைச் சுரப்பது போல்

படிக்கப் படிக்க அவளாற்றல் நன்கு

பல்கிப் பெருகும் வகையறிந்தோம்"

பனையென்பது தமிழர் வாழ்வில் முக்கிய வளமும் மரமுமாகிறது."வான் நோக்கி வளரட்டும் வடலிகள்" கவிதையில் இவ்வாறு கூறப்படுகிறது.

"ஏடு தந்து எம்தமிழை வளர்த்த தரு

இனிய கனி எமக்களித்து மகிழும் தரு

சுவையான கள்ளுடனே பதநீர் தந்து

சுறுசுறுப்பு உணர்வதனை ஊட்டும் தரு"

போர்க்காலத்தில் இந்த கற்பகதருக்களில் அதிகமானவை அழிக்கப்பட்டாலும் தற்போது அவை புத்துயிர்ப்பு பெற்று வருவதை காண முடிகிறது.எமது முன்னோர் பனையோலை மடல்களிலேயே ஏடு செய்து எழுத்தாணி கொண்டு தமிழை வளர்த்தனர் என்பது நமது இளம் தலைமுறைக்கு நினைவுபடுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக கள் அருந்துவதை என்பதை இழிவான செயலாக சமூகம் பார்த்தாலும் கூட அதிகாலையில் சுரக்கும் பதநீர் உடலுக்கு ஆரோக்கியம் மிகுந்த பானமாக கருதப்படுவதை இந்த பாடலில் நினைவூட்டுகிறார் கவிஞர்.

இவ்வாறு நாற்பத்திரெண்டு சிறுவர் பாடல்களை கொண்டுள்ளது கவிஞர் ஷெல்லிதாசனின் "அம்மாவுக்குப் பிடித்த கனி".வெறுமனே சிறுவர் பாடல்கள் என இந்த தொகுதியை கடந்து செல்ல முடியாது. ஏனெனில் சிறுவர் இலக்கியம் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தேவை காணப்படும் காலத்தில் வந்த முக்கியமான நூலாக இது இருக்கிறது. அத்துடன் சமூக நோக்கு,நற்பண்புகள் மற்றும் இளையோர் அறிய வேண்டிய தொன்மங்கள் குறித்தும் பேசுவதால் இந்த தொகுதி முக்கியமாகிறது.

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் இளவரசி - ஊர்துஜா

  ஊர்துஜா   ஒரு புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் இளவரசி , மொராக்கோவை சேர்ந்த முஸ்லிம் பயணி   இபின் பதூதாவின்   பயணக் குறிப்புகளில் (1304 - க...